Friday, April 29, 2011

ஸ்டெர்லைட் விவகாரம் : மதிமுக அறிக்கை.


ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட நீரி நிறுவனம், தனது அறிக்கையை வைகோவுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று, சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைகோ வழக்குத் தொடுத்து இருந்தார். உயர்நீதிமன்றம், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு, 2010 செப்டம்பர் 28 ஆம் நாள் ஆணை பிறப்பித்து இருந்தது.

அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்குத் தொடுத்தது. ஆலையை நிரந்தரமாக மூடுமாறு வைகோவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார். நாக்பூர் நீரி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்துக்குத் தர வேண்டும் என்று, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீரி நிறுவனம், ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்கவில்லை.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் வைகோ தெரிவித்ததாவது:

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 40 நாள்களுக்குப் பின்னர்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு, நீரி நிறுவனம் ஆய்வுக்கு வந்தது. முதல் சுற்று ஆய்வு, ஏப்ரல் 6, 7, 8, தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆய்வு, ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு இணங்க, எனக்கும் தகவல் தரப்பட்டு, நானும் ஆய்வின்போது உடன் இருந்தேன். ஆய்வு அறிக்கையை, நீரி தந்தபின், அதனுடைய பிரதிகள் எனக்கும் வழங்கப்பட வேண்டும்; அந்த அறிக்கையின் மீதான எனது கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்கு நீதியரசர்கள், ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர், ‘நீரி நிறுவனம் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் உடன் இருந்து ஏற்பாடு செய்ய வேண்டும்; அந்த அறிக்கையின் பிரதி, வைகோவுக்கும் வழங்கப்பட வேண்டும்; அதன்பின்னர் வைகோ தன்னுடைய கருத்துகளை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும், வழக்கு ஜூலை மூன்றாம் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மதிமுக சட்டத்துறைச் செயலர்கள் வழக்கறிஞர் தேவதாஸ், தில்லியில் மதிமுக வழக்கறிஞர் பாலாஜியும் உடன் இருந்தனர்.

இவ்வாறு மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: