Friday, April 29, 2011

இலங்கையில் மேட்ச் பிக்ஸிங் : ஹசான் திலகரத்ன குற்றச்சாட்டு.


இலங்கை கிரிக்கெட்டில் 1992-ம் ஆண்டில் இருந்து மேட்ச் பிக்ஸிங் எனப்படும் சூதாட்டம் நடப்பது சாதாரணமானதுதான் என அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஹசான் திலகரத்ன கூறியுள்ளார்.

சூதாட்டங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

மேட்ச் பிக்ஸிங் இன்று, நேற்று தொடங்கியதல்ல. எனக்குத் தெரிந்தவரை, 1992-ம் ஆண்டில் இருந்து அது நடைபெறுகிறது. பொறுப்புணர்ச்சியுடன் இதைக் கூறுகிறேன் என திலகரத்ன குறிப்பிட்டார்.

ஏப்ரல் 2003 மற்றும் மார்ச் 2004-க்கு இடைப்பட்ட காலத்தில் திலகரத்ன இலங்கை அணியின் கேப்டனாக இருந்தார்.

சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணபலத்தால் இந்த விவகாரத்தை வெற்றிகரமாக மறைத்துவிடுகிறார்கள். அவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என திலகரத்ன குறிப்பிட்டார்.

தற்போது இந்தியாவுடனான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாகக் கூறமுடியாது. ஆனாலும் இலங்கையில் மேட்ச் பிக்ஸிங் சூதாட்டம் புற்றுநோயைப் போல பரவிவிட்டது.

உலகக் கோப்பை போட்டியில் ஏன் 4 வீரர்களை மாற்றினார்கள். அதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். மெந்திஸை ஏன் மாற்றிவிட்டு மற்றொருவரைக் கொண்டுவந்தார்கள். கபுகெடர ஒருபோதும் ரன்களே எடுக்கவில்லை. ஆனால் சமரசில்வாவுக்கு பதிலாக அவரைத் தேர்ந்தெடுத்தனர். அது நியாயமில்லை என திலகரத்ன தெரிவித்தார்.

உலகக் கோப்பை அணி தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டம் குறித்தும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

ஜனவரி 7-ம் தேதி உலகக் கோப்பை அணி தேர்வுசெய்யப்பட்டது. ஐபிஎல் ஏலம் ஜனவரி 8-ம் தேதி நடைபெற்றது. ஐபிஎல் ஏலத்துக்கு ஒருநாள் முன்பாக ஏன் இலங்கை அணி தேர்வுசெய்யப்பட்டது என நான் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி கேட்டிருந்தேன்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜனவரி 11, 12, 13-ம் தேதிகளில் மாகாண கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இருந்தால் அந்த போட்டிகளை பார்த்து சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அணியில் இடம்பெற்ற 2, 3 வீரர்களுக்கு பதிலாக வேறு சில வீரர்கள் கிடைத்திருப்பார்கள் என நம்புகிறேன். உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அணி சிறந்த அணிதானா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏன் ஐபிஎல்லுக்கு முன்பாக அணி வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


No comments: