மும்பையில் 2008-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பில் 188 பேர் பலியானார்கள். 817 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரெயிலில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பராக் சவாந்த் (32) என்ற தனியார் நிறுவன ஊழியர் பலத்த காயம் அடைந்தார். அவரது நெற்றி, தலை, மார்பு போன்ற பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. தலையில் அடிபட்டதால் மூளையிலும் சேதம் ஏற்பட்டது. அவர் மீரா சாலையில் உள்ள பக்திவேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. சுயநினைவை இழந்து “கோமா” நிலையை அடைந்தார். பின்னர் அவர் இந்துஜா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் இழந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் வந்து பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டனர். மனைவி கூட இவரை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் அவருக்கு திடீரென நினைவு திரும்பியது. அவர் கோமாவில் இருந்து மீண்டிருப்பது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. நேற்று போன் மூலம் தனது பெற்றோருடன் பராக் பேசினார். 5-வது மகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டு நலம் விசாரித்தார். நன்றாக படிக்கிறாளா? என்றும் கேட்டார்.
இது அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து பராக் உடன் உரையாடினர். இன்னும் சிறிது நாட்களில் பராக் முழுமையாக குணமடைந்து விடுவார் என்றும், இது மருத்துவ அதிசயம் என்றும் இந்துஜா ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment