தமிழ் சினிமாவில் மாடர்ன் தியேட்டர்ஸ் பங்கு மகத்தானது. தமிழில் முதல் பேசும் உருவானது இங்குதான். பெயர் கவி அகல்யா. முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களையும் உருவாக்கியது இதே மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.
எம்ஜிஆர், என்டிஆர், கருணாநிதி, ஜானகி எம்ஜிஆர் என நான்கு முதல்வர்களின் முதல் படங்களை உருவாக்கிய பெருமை இந்த மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு.
1935-ல் நிறுவப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ், 180 தமிழ் படங்கள், 1 இந்திப் படம், 1 ஆங்கிலப் படம், பல தென்னிந்திய மொழிப் படங்களின் தயாரிப்புக் கூடமாக திகழ்ந்தது. காளி கோயில் கபாலி என்ற படத்தோடு தனது தயாரிப்புப் பணியை நிறுத்திக் கொண்டது.
அதன் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் குடியிருப்புப் பகுதியாக மாறிப் போனது. இன்று மிச்சமிருப்பது மாடர்ன் தியேட்டர்ஸின் கம்பீரமான முகப்புப் பகுதி மட்டுமே.
ஒருகாலத்தில் சினிமாவின் தலைமைப் பீடமாகத் திகழ்ந்த அந்தப் பிரதேசத்தின் நினைவுகளை அசைபோட தமிழ் சினிமா ஆர்வலர்கள் இப்போதும் தவறுவதில்லை. சிலர், மாடர் தியேட்டர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றும் தங்கள் படங்களின் துவக்க காட்சியை இங்கே வைப்பதும் உண்டு.
அந்த வகையில், சமீபத்தில் 'அழகு மகன்' என்ற சினிமா படப்பிடிப்புக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் ஏற்காடு சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸில் நடந்தது.
இதில் நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா, ஜெயக்குமாரி, பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி, இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ், நடிகர்கள் இளவரசு, சிங்கம்புலி, இயக்குனர் கவுதமன், ஆசைத்தம்பி, விஜய்ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிஐடி சகுந்தலா கூறுகையில், "சேலம் மாடர்ன் தியேட்டர்ஸை வாழ்நாளெல்லாம் மறக்கமாட்டேன். சாகும்போது கூட மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவுடன் தான் சாவேன். அந்தளவிற்கு என் வாழ்க்கையிலும், என்னை போல் மற்றவர்கள் வாழ்க்கையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் அங்கம் வகித்துள்ளது. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தையும் நாங்கள் மறக்க மாட்டோம். பல கலைஞர்களை உருவாக்கிய மாமனிதர். அவர் கையால் குட்டுப்பட்டவர்கள் தான் இன்று திரையுலகில் இருப்பவர்கள். பல சாதனை கலைஞர்களை இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான் உருவாக்கி இருந்தது. இந்த இடத்தில் நிற்பதையே பெருமையாக கருதுகிறேன்," என்றார்.
விழாவில் கலந்து கொண்ட சங்கர் கணேஷ், "மாடர்ன் தியேட்ர்ஸின் மிச்சமாக இப்போதுள்ள இந்த முதப்புப்பகுதிதான் தமிழ் சினிமாவின் அடையாளம். மாடர்ன் தியேட்டர் தயாரித்த பல படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் பணியாற்றிய இந்த இடத்தில் நிற்பதே பெருமை," என்றார்.
No comments:
Post a Comment