Friday, March 25, 2011

தமிழக தேர்தல் -சோனியா, ராகுல் புறக்கணிப்பு.

தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் வர மாட்டார்கள் என்று தெரிகிறது. வேட்பாளர் தேர்வின்போது தலைவிரித்தாடி கோஷ்டிப் பூசலால் இருவரும் மனம் ஒடிந்து போய் விட்டதால் இந்த முடிவாம்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசலை மகாத்மா காந்தியே மறு பிறவி எடுத்து வந்தாலும் தீர்க்க முடியாது. அந்த அளவுக்கு கோஷ்டிப் பூசலில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது காங்கிரஸ்.

இந்த கோஷ்டிப் பூசலைத் தீர்த்துக் காட்டுகிறேன் என்று சவால் விடுவது போல தமிழக காங்கிரஸ் விவகாரத்தை சமீப காலமாக பார்த்து வந்த ராகுல் காந்தியே வெறுத்துப் போகும் அளவுக்கு சமீபத்திய வேட்பாளர் தேர்வின்போது கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டி விட்டதாம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பம் மற்றும் உள்ளடி வேலைகள், ஒவ்வொரு கோஷ்டியினரும் கொடுத்த நெருக்கடிகளால் ராகுல் காந்தியும், சோனியாவும் வெறுத்துப் போய் விட்டனராம்.

இதனால் வருகிற தேர்தலுக்கான பிரசாரத்திற்கு இருவரும் வர மாட்டார்கள் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினரே.

திமுகவிடமிருந்து அதிக தொகுதிகளைப் பெறுவதில் அத்தனை கோஷ்டியினரும் காட்டிய ஒற்றுமையால் காங்கிரஸ் மேலிடம் உள்ளூர மகிழ்ச்சியுற்றது. அதனால்தான் திமுகவிடமிருந்து அதிக இடங்களைப் பெறுவதில் மேலிடமும் தீவிரம் காட்டியது. ஆனால் 63 சீட்களை வாங்கிய அடுத்த விநாடியே ஒவ்வொரு கோஷ்டியினரும் தனித் தனியாக பிரிந்து தத்தமது ஆதரவாளர்களுக்கு சீட் பிடிக்க காட்டிய மோதலும், உள்ளடி வேலைகளும் மேலிடத்தை அதிர வைத்து விட்டதாம்.

இதன் காரணமாகவே சோனியாவும், ராகுலும் இந்த முறை வர மாட்டார்கள் என்று தெரிகிறது. மேலும், திமுகவுடன் கடும் மோதலில் ஈடுபட்டு விட்ட நிலையில் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கு சோனியா காந்தி தயங்குகிறாராம். அதேபோல ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோதெல்லாம் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை. மரியாதை நிமித்தமாக கூட அவர் சந்திக்கவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக மட்டும் பிரசாரம் செய்ய வந்தால் அது மிகப் பெரிய சந்தர்ப்பவாத செயலாக எதிர்க்கட்சிகளால் பிரசாரம் செய்யப்படும் என்பதால் அவரும் வர மாட்டார் என்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தன்னுடைய எதிர்பார்ப்புகளை தமிழக காங்கிரஸார் தவிடுபொடியாக்கி விட்டதும் ராகுலை வெறுப்படைய வைத்து விட்டதாம்.

எனவே திமுகவினரின் தயவை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்க வேண்டிய பெரும் இக்கட்டான நிலைக்கு தமிழக காங்கிரஸார் தள்ளப்பட்டுள்ளனர்.

1 comment:

ராஜ நடராஜன் said...

ரொம்ப நல்ல செய்தி!