Friday, March 25, 2011

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் கடும் தாக்குதல்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென தாக்குதலில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தனது மனைவிக்கு சீட் வாங்கிக் கொடுத்து விட்டார், தனது ஆதரவாளர்களுக்கு முக்கியமான தொகுதிகளை ஒதுக்கிக் கொண்டு விட்டார் என்று தங்கபாலு மீது காங்கிரஸ் கட்சியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

குமரி மாவட்டத்தில் தங்கபாலுவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். சென்னையில், மயிலாப்பூர் வேட்பாளராக தங்கபாலு மனைவி அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து தங்கபாலு வீட்டுக்கு வெளியே பெண்கள் காங்கிரஸார் ஆவேசப் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திரு.வி.க.நகர் தனித் தொகுதி வேட்பாளராக தங்கபாலு கோஷ்டியைச் சேர்ந்த டாக்டர் நடேசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இன்று பிற்பகல் சத்தியமூர்த்தி பவனில் திருவி.க.நகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸார் திரண்டனர். நடேசன் காங்கிரஸ்காரரே அல்ல, தங்கபாலுவுக்கு வேண்டியவர்கள் எல்லாம் காங்கிரஸ்காரர்கள் அல்ல என்று ஆவேசமாக அவர்கள் கூச்சலிட்டனர். பின்னர் திடீரென கல்வீசித் தாக்குதலில் இறங்கினர்.

இந்த கோபாவேச தாக்குதலில் அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள், மின்விளக்குகள் உடைந்து சிதறின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நிலைமை பதட்டமாக இருப்பதால் போலீஸார் உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர்.

மனுத் தாக்கல் செய்தார் ஜெயந்தி

இந்த கடும் அமளிகளுக்கு மத்தியில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி இன்று மனுத் தாக்கல் செய்தார். அவருடன் தங்கபாலுவும் சென்றிருந்தார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் குறித்து கேட்டபோது, எந்தக் கட்சியாக இருந்தாலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சியிலும் எத்தனையோ பேர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டாலும் கூட சிலருக்குத்தான் கிடைக்கும். அதை மற்றவர்கள் ஏற்பார்கள்.

கட்சித் தலைமை யாருக்கு சீட் கொடுக்கிறதோ, யார் தகுதியானவர்கள் என்று எண்ணி கொடுக்கிறதோ அதுவே இறுதியானதாகும். இது காங்கிரஸுக்கும் பொருந்தும். இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றார்.

No comments: