Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை : 13வது நாளாக போராட்டம் நீடிப்பு ; கூடலூரில் பிரமாண்ட பேரணி.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை: 13வது நாளாக போராட்டம் நீடிப்பு; கூடலூரில் பிரமாண்ட பேரணி

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க வேண்டும். கேரள அரசு புதிய அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக மறியல், பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடந்து வருகின்றன.

பேரணி - ஆர்ப்பாட்டம் கம்பம், கூடலூர், போடி வழியாக கேரளாவுக்கு பஸ் மற்றும் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கம்பம், கூடலூர் பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

தற்போது அரையாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று கம்பம் நகரம் குலுங்கும் வகையில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.

அதே போல குமுளி செல்லும் வழியில் உள்ள கூடலூரில் இன்று பிரமாண்டமான முறையில் அமைதி பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது. 30 ஆயிரம் பேர் திரண்டனர் கூடலூர் பழைய பஸ் நிலையம் முன்பிருந்து பேரணி புறப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆண்களும், பெண்களும் அணி, அணியாக திரண்டு வந்தனர்.

10 மணி அளவில் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேரம் செல்ல செல்ல பேரணியில் கலந்து கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேரள அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தீர்வு காணும் வரையில் கேரளாவுக்கு செல்லும் 13 எல்லை சாலைகளை மூட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

பேரணி குமுளி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த பேரணியில் கூடலூர் பகுதி அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், பாங்கி ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், அனைத்து தரப்பு மக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்கனவே கூடலூர் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்று பேரணி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். போராட்டக்காரர்களை குமுளி எல்லைக்கு செல்ல விடாமல் தடுக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே போடியில் அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர் நல சங்கத்தினர் திருவள்ளுவர் சிலை அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments: