Saturday, December 17, 2011

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், தேர்வில் மதிப்பெண் பெறும் முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது.

புதிய விதிமுறையின்படி, ஜெனரல் சர்ஜரி, என்ற பாடப்பிரிவை கிளினிக்கல் சர்ஜரி, ஆர்த்தோ கிளினிக்கல் என்று இரு பிரிவாக பிரித்து, கிளினிக்கல் சர்ஜரியில் குறைந்தபட்சம் 100க்கு 50 மதிப்பெண்ணும், ஆர்த்தோ கிளினிக்கல் பாடத்தில் குறைந்தபட்சம் 50க்கு 25 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பெற்றால்தான் அந்த மாணவர் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்றும் மாற்றப்பட்டது.

இந்த புதிய மதிப்பெண் விதிமுறை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி, எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வகுத்துள்ள புதிய விதிமுறை செல்லாது என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களை இண்டென்சிப் எனும் பயிற்சி மருத்துவர் பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கடந்த ஜீன்மாதம் தீர்ப்பு கூறி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதியவிதி முறை செல்லாது என்றும், தனி நீதிபதி பி.ஜோதிமணி, வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், கடந்த நவம்பர் மாதம் 16ந்தேதி தீர்ப்பு கூறி, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதால் அந்த விதிமுறைகள் செல்லாது என்று, நேற்று டிசம்பர் 16ந்தேதி தீர்ப்பு கூறியது.

மேலும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த விதிமுறைகள் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், மாநிலத்துக்கு மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளை மாற்றக் கூடாது என்றும், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

முன்னதாக நீதிபதிகள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

No comments: