Friday, May 6, 2011

ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு : தமிழக அரசு விளக்கம்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் இணையதளம் மூலம் மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

15.09.10 முதல் வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலக உயிர்ப்பதிவேட்டின் விபரங்கள் இணையதளத்தில் ஏற்றம் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள சுமார் 70 இலட்சம் மனுதாரர்களின் பதிவு விவரங்கள் இணைய தளத்தில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல், மனுதாரர்கள் வசிக்கும் இடத்திலேயே இணையதளம் மூலமாக மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் நீண்டதூரம் பயணம் செய்து சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை தவிர்க்கப் பட்டுள்ளது. மேலும் தற்போது மதுரையில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் துவக்கப்பட்டுள்ளதால் 15 தென் மாவட்ட முதுகலைப் பட்டதாரி மனுதாரர்கள் சென்னைக்கு வராமல் மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்திலேயே தங்களது பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் இதரப்பணிகளை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்துறையில் வேலைவாய்ப்பு அலுவலக, பதிவுப்பணிகள் இணையதளம் மூலமாக கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஆரம்ப காலத்தில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் அவை உடனுக்குடன் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமாக சரிசெய்யப்பட்டு வருகிறது. எனினும் இத்திட்டம் முழுமையாகவும், சிறப்பாகவும், மனுதாரர்கள் பயனடையும் வகையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

பொதுவாக வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தேவைக்கேற்ப இதர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டு, அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: