Friday, May 6, 2011

அரசு அதிகாரி மீது வழக்கு : அண்ணா ஹஸாரே முடிவு.


ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பிய புணே நகர அறக்கொடைத்துறை உதவி ஆணையர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அண்ணா ஹஸாரே முடிவு செய்திருக்கிறார். ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு அவர்தான் தலைவர்.

"தணிக்கை செய்யப்பட்ட முழுமையான கணக்குகளைத் தாக்கல் செய்யாத உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என்று கேட்டு அறக்கொடை ஆணையர் அலுவலகத்தின் உதவி ஆணையர் ஹிந்த் ஸ்வராஜ், அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இந்த நோட்டீûஸப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் தணிக்கை அறிக்கையை அவர்கள் உரிய காலத்தில் அனுப்பிவிட்டனர்.

நோட்டீஸ் வந்ததை அறிந்த அண்ணா ஹஸாரே அறக்கட்டளையின் பிற நிர்வாகிகளை அழைத்து "கணக்கைத் தாக்கல் செய்தீர்களா இல்லையா?' என்று கேட்டார்.உடனே அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை நகலையும் ஒப்புகைச் சான்றிதழையும் காட்டினர்.

ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை 2008-09 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாகவும் அதே சமயம் நிரந்தர வைப்பு நிதியில் ரூ.50 லட்சத்தை வைத்திருந்ததாகவும், ரூ.23.49 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருந்ததகாவும் அவற்றை ஆணையருக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டு விட்டதாகவும் மற்றொரு அறக்கட்டளை அளித்த புகாரை ஆராயாமல் உதவி ஆணையர் இந்த நோட்டீûஸ அனுப்பிவிட்டார். இது ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளையே இப்படியா என்று பலரை வியப்புற வைத்தது. அதன் பிறகு உண்மை அறிந்து அந்த அதிகாரி மன்னிப்பு கோரினார்.

ஆனாலும் உண்மை மற்றவர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி நகரில் நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார் ஹஸாரே.

No comments: