Friday, May 6, 2011

பின்லேடன் கொலையில் இறுதி நேரம் - அவிழும் மர்மங்கள்.


உலகையே பயங்கரவாத செயல்களால் கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருந்த உலகமகா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் ஏகப்பட்ட மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன. சர்ச்சைகள் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது ஒவ்வொன்றாய் முடிச்சு அவிழ ஆரம்பித்துள்ளன. கடந்த 2001ல் அமெரிக்காவில், அதன் பெருமைக்கு காரணமாக நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர உலக வர்த்தக மைய கட்டடம் மற்றும் வெர்ஜினியாவில் பென்டகன் ராணுவ மையம், பென்சில்வேனியா மற்றும் வாஷிங்டன் போன்ற இடங்களில் நான்கு விமானங்களை மோதி 3 ஆயிரம் பேர் இறந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை உலகமே மறந்திருக்கவில்லை.

இந்த கொடூர தாக்குதல்களுக்கு காரணமான அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பத்தாண்டுக்கு பின் சமீபத்தில், பாகிஸ்தான் மண்ணிலேயே சுட்டுக்கொன்றுள்ளது. இதுவரை வெளிவராத தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன. ராய்ட்டர், சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் விசாரணை செய்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

வெளியிட முடியாது

பின்லேடனை எப்படி அமெரிக்க படை கொன்றது என்பதில் பல மர்மங்கள் நீடிக்கின்றன. சுட்டுக்கொன்ற கையோடு, அவர் உடலை கொண்டு போய் கடலில் வீசி விட்டதும், அவர் உடல் மற்றும் சம்பவ இடங்களில் எடுத்த போட்டோக்களை வெளியிடாததும் புதிராகவே உள்ளது. ‘அவரை தியாகியாக்க கூடாது; சமாதி கட்டி விடுவர் சிலர் என்று தான் உடலை கடலில் வீசினோம்’ என்று சொன்ன அமெரிக்கா, ‘போட்டோவை வைத்து அல்கய்தா பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடும் என்பதால் போட்டோக்களை வெளியிடத் தயாரில்லை’ என்றும் கூறி விட்டது.

ரத்தத்தில் 3 உடல்கள்

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அபோதாபாத் பங்களாவில் நடந்தது என்ன என்பது பற்றி இப்போது தான் பல தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஞாயிறன்று நள்ளிரவில் 40 நிமிடத்தில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர், தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து, பின்லேடன் உடலுடன் ஹெலிகாப்டரில் பறந்தபின், அந்த இடத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் வந்தது.

பின்லேடனின் பங்களாவை சுற்றிவளைத்து, ஒவ்வொரு அறையாக ஆராய்ந்தது. எங்கும் சுவர்களில் குண்டுகள் பாய்ந்திருந்தன. ரத்தக்களரியாக பல இடங்கள் காணப்பட்டன. ஒரு அறையில் மூன்று பேர் உடல்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தினர். இருவர், பைஜாமா குர்தாவில் இருந்தனர்; ஒருவர் பேன்ட் டீ ஷர்ட் அணிந்திருந்தார். ராய்ட்டர் செய்தி நிறுவனம் இந்த படங்களை வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு அருகே எந்த ஆயுதமும் காணப்படவில்லை. ஆனால், ஒருவனின் இடதுதோள் பக்கம் ஒரு பொம்மை துப்பாக்கி மட்டும் இருந்தது. குழந்தைகள் விளையாடும் பச்சை நிற பிளாஸ்டிக் துப்பாக்கி அது.

இறந்தது மனைவி அல்ல

பின்லேடனை சுட்டுக்கொன்ற போது, ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார் என்று முன்பு செய்தி வந்தது. அந்த பெண் பின்லேடனின் மனைவி என்றும் கூறப்பட்டது. ஆனால், அது உண்மையல்ல என்று இப்போது அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறியுள்ளார். பின்லேடன் வீட்டில் 3 பெண்கள், 9 குழந்தைகள் இருந்துள்ளனர். தபால் கொண்டு வரும் ஒரு நம்பிக்கைக்கு உரிய தொழிலாளியும் இருந்துள்ளார். அவர் மனைவியும் அவ்வப்போது அங்கு வருவது உண்டு. இந்த பெண் தான், துப்பாக்கி குண்டுக்கு இரையாகி உள்ளார். கூரியர் தொழிலாளியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காலில் டுமீல்; ஒசாமா என கத்தல்

ஆனால், மனைவி அமல் அல் சபா தப்பி விட்டார். அமெரிக்க வீரர்கள் திடீரென நுழைந்ததை பார்த்த முதல் ஆள் அவர் தான். வீரர்கள் மீது பாய்ந்தபடி, பின்லேடன் பெயரை உச்சரித்தபடி கத்தினார். பின்லேடன் தப்ப வேண்டும் என்பதற்காக அப்படி கத்தியுள்ளார். இதை உணர்ந்த அடுத்தநொடியே அந்த பெண் காலில் சுட்டனர் வீரர்கள். அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். அவரை மற்ற வீரர்கள் தூக்கிச் சென்றனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நொடி கூட தாமதிக்கவில்லை

அமெரிக்க வீரர்கள் நுழைந்து விட்டனர்; தன்னை கொன்று விடுவர் என்று எண்ணக்கூட பின்லேடனுக்கு நேரம் வாய்க்கவில்லை. பங்களாவில் அவர் படுக்கை அறை மூன்றாவது மாடியில் தான் உள்ளது. மனைவியின் கதறலை தொடர்ந்து உஷாராகி இருக்க வேண்டும். ஆனால், கண்ணிமைக்கும் நொடிகளில் படுக்கை அறையில் அதிரடிப்படை வீரர்கள் பாய்ந்து விட்டனர்.

பின்லேடனை பார்த்த கணமே, யார் முதலில் சுடுவது என்று நினைக்காமல், அங்கு நுழைந்த மூன்று வீரர்களில் ஒருவர் டுமீல் என்று சுட, அடுத்த நொடிகளில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன. நெற்றி, மார்பு பகுதியை குண்டுகள் துளைத்தபடி, பின்லேடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து பிணமானார்.

தப்ப நினைத்தாரா

தொளதொள பைஜாமா, குர்தா அணிந்திருந்தார் பின்லேடன். அவர் பாக்கெட்டில், ஒரு துண்டுச்சீட்டில் 2 டெலிபோன் எண்கள் இருந்தன. 500 யூரோ கரன்சிகள் காணப்பட்டன. அவர் தப்ப நினைத்திருக்கலாம்; அதனால் தான் பாக்கெட்டில் அவசர அவசரமாக பணத்தை அள்ளித் திணித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்க எம்பிக்களுக்கு சிஐஏ உளவு அமைப்பின் இயக்குனர் லியான் பனட்டா கூறுகையில், ‘பின்லேனை உயிருடன் பிடிக்க முடியும் என்ற சூழ்நிலை காணப்படவில்லை. அவர் நிராயுத பாணியாக இருந்தார் என்றாலும், அவரை பார்த்த மூன்று வீரர்களில் யார் சுடுவது என்று தான் அவர்கள் மனநிலை இருந்தது. அதனால் அவரை சுட்டுக்கொன்றனர் ’என்று தெரிவித்தார்.

கைக்கெட்டும் தூரத்தில் துப்பாக்கி

உலகமகா தீவிரவாத அமைப்பின் தலைவனுக்கு பாதுகாவலர்கள் இல்லாமலா இருப்பர் என்ற சந்தேகத்துக்கு சரியான விளக்கம் இதுவரை அமெரிக்க, பாகிஸ்தான் தரப்பில் தரப்படவில்லை. பின்லேடன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவர் படுக்கையில் துப்பாக்கி வைத்திருப்பது இல்லையாம். ஆனால், அந்த அறையில் ஒரு மூலையில் துப்பாக்கி இருந்துள்ளது. பின்லேடனை வீரர்கள் பார்த்த மாத்திரத்தில் அந்த துப்பாக்கியை அவர் எடுத்திருக்க முடியும். இதனால் தான் அவரை சுட்டுக்கொல்ல வீரர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவர் மார்பில் முதல் குண்டு பாய்ந்தது: இரண்டாவது அவர் இடது கண்ணுக்கு மேலே பாய்ந்தது.

5 கம்ப்யூட்டர், டிவிடிக்கள்

பின்லேடன் பங்களாவில் கம்ப்யூட்டர் இணைப்பு மட்டுமில்லை. ஆனால், 5 கம்ப்யூட்டர்கள், 100 ஸ்டோரேஜ் டிவைஸ், டிவிடிக்கள், 5 மொபைல் போன்கள், ஏகே 47 ரகம் உட்பட 5 துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவற்றை பறிமுதல் செய்த அமெரிக்க படையினர் கொண்டு சென்று விட்டனர். இவற்றின் மூலம் பல தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த 80வது நபர் யார்?

பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த சீல் 6 என்ற பிரிவை சேர்ந்தது. ஐந்து ஹெலிகாப்டர்களில் 79 பேர் அபோதாபாத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டனர். 80வது நபர் ஒருவர் உண்டு. அவர் இரண்டு கால் மனிதர் அல்ல; நான்கு கால் சூப்பர்மேன். ஆம், மோப்ப நாய். மனிதனை விட இரண்டு மடங்கு பாய்ச்சல்; எந்த குகையிலும் நுழைந்து மோப்பம் பிடித்து மனிதனை கவ்வி, கடித்து, இழுத்து வந்து விடும்.

ஆப்கன், ஈராக் போர்களில் மட்டும் 400 மோப்ப நாய்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது. பின்லேடனை கொல்ல சென்ற படையில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு நாய் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் வேலை சுலபமாக முடிந்து விட்டது. மூன்றாவது மாடியில் படுக்கை அறையில் இருந்த பின்லேடனை சுலபமாக கண்டுபிடித்து விட்டது.

இளம் மனைவி துணிச்சல்

பின்லேடன் இளம் மனைவி பெயர் அமல் அல் சபா; வயது 27. ஏமன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர். 17 வயதில் அவர் பின்லேடனை மணந்தார். ஆரம்பத்தில் பல இடங்களில் பதுங்கியதால், அவரை ஏமனுக்கு போய் தங்கிவிடும்படி அனுப்பிவிட்டார் பின்லேடன். ஆனாலும், பின்லேடன் தீவிரவாத இயக்கத்தில் அல் சபா ஒன்றி விட்டார். இதனால் அவர் மீது பின்லேடனுக்கு தனி அன்பு உண்டு. கடந்த 2005ல் அபோதாபாத் பங்களாவில் தங்கியதில் இருந்து பின்லேடனுடன் அல் சபா தொடர்ந்து தங்கி இருந்தார். பாதுகாப்பு கருதி அவரை அனுப்பிவிட பின்லேடன் திட்டமிட்டாலும் அவரை விட்டு செல்ல மறுத்து விட்டார்.

பாகிஸ்தான் ராணுவம் நடுக்கம்

பாகிஸ்தானுக்குள் அதுவும் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே புகுந்து சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை 40 நிமிடங்களில் சுட்டுக் கொன்றுவிட்டு அமெரிக்க ராணுவம் திரும்பி சென்றுவிட்டது. இந்த அதிரடி தாக்குதல் சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகுலையச் செய்துள்ளது. அதற்கே தெரியாமல், ராணுவ அகடமி அருகே இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அதனுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

பலம்வாய்ந்த ராணுவம் என்று மார்தட்டிக் கொண்டு இருந்த பாகிஸ்தானுக்கு இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போய்விட்டது. அதனுடைய உளவுத் துறை எப்படி இதை முன்கூட்டியே அறிந்து கொள்ள இயலவில்லை என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் அதிரடி தாக்குதல் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், உள்நாட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நம்பிக்கை குறைவும் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவமும் உளவுத் துறையும் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எதைச் சொன்னாலும் அது பெரும் சர்ச்சை ஏற்படும் என்பதால் இறுகிய மனதுடன் மவுனம் சாதித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம், ராணுவத்தின் பலவீனத்தையும் அரசு நிர்வாகத்தின் பலவீனத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

அபோதாபாத் தாக்குதல் சம்பவத்தை முன்கூட்டியே தெரியாமல் செயலிழந்து போய்விட்ட ராணுவம், உளவுத் துறையின் செயல்பாட்டை பாகிஸ்தான் எம்.பி.க்கள் கடுமையாக குறை கூறியுள்ளனர். இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளனர்.


பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பேசுகையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராணுவ அகாடமி இருக்கும் பகுதியில் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். அதுகூட அந்த நாட்டின் ராணுவத்துக்கு தெரியவில்லை என்று சொல்வது நம்பும்படி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராணுவம் ஊடுருவி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் மக்களிடையே அச்சத்தையும் அதே நேரத்தில் அந்த நாட்டின் ராணுவம், உளவுத் துறை, ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments: