Wednesday, July 27, 2011

மாணவ - மாணவிகளை வேனில் கடத்திச் சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் .70 பள்ளி மாணவ - மாணவிகளை போலீசார் மீட்பு.



70 பள்ளி மாணவ - மாணவிகளை போலீசார் மீட்பு.

திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்த அமைப்பின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் கிளர்ச்சியாளன் நிர்வாகிகள் நந்தகுமார், வசந்த் உள்பட 7 பேர் நேற்று காலை பாலக்கரை பீமநகர் பகுதிக்கு ஒரு வேனில் வந்தனர்.

அப்போது அவர்கள் அங்கு பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளிடம் நாங்கள் உங்களை வேனில் அழைத்து கொண்டு பள்ளி விடுகிறோம் என்று கூறினார். இதை நம்பிய சுமார் 35 மாணவ - மாணவிகள் வேனில் ஏறினர்.

பின்னர் இந்த அமைப்பினர் சி.இ.அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று அந்த பகுதியில் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் சிலரையும் உங்களை வழக்கமாக ஏற்றி செல்லும் வேன் இன்று வராது என்று கூறி அவர்களையும் பள்ளியில் விடுவதாக சொல்லி ஏற்றினர்.

பின்னர் 70 மாணவ - மாணவிகளுடன் அந்த வேன் புறப்பட்டு சென்றது. வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு வழியாக சென்றதால், பள்ளி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேனில் இருந்த மாணவிகள் கதறி அழுதனர்.

இந்த தகவல் இரு பள்ளி நிர்வாகிகளுக்கும், பெற்றோருக்கும் தெரியவந்தது. பெற்றோர் தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு ஓடி வந்தனர். திருச்சியில் வேனில் பள்ளி மாணவ - மாணவிகள் கடத்தப்பட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு பள்ளிகளிலும் பெற்றோர் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பள்ளி மாணவ - மாணவிகளுடன் சென்ற வேன் மரக்கடை அருகே உள்ள திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அடைந்தது. அங்கு பள்ளி மாணவ-மாணவிகளை கூட்டமாக வைத்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மாவட்ட செயலாளர் கிளர்ச்சியாளன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. "சமச்சீர் கல்வியை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்'' என்பதை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மாணவ - மாணவிகளை தேடி அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, முன்அனுமதியின்றி பள்ளி மாணவ - மாணவிகளை வேனில் கடத்தி வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஏன் எங்கள் பிள்ளைகளை வைத்து போராட்டம் நடத்துகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் 70 பள்ளி மாணவ - மாணவிகள் போலீசார் மீட்டு, அந்தந்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனில் மாணவ - மாணவிகளை கடத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

No comments: