Wednesday, July 27, 2011

விழுப்புரம் கல்லூரியில் பயங்கரம் ஆசிரியர் அடித்ததில் மாணவர் சாவு.

விழுப்புரம் கல்லூரியில் பயங்கரம் ஆசிரியர் அடித்ததில்    மாணவர் சாவு;    சாலை மறியல்-போலீஸ் தடியடி

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் புதுவை கோவிந்தசாலை பாரதிபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் பிரபாகரன் (வயது 19). ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பிரபாகரன் வழக்கம் போல் இன்று காலை கல்லூரிக்கு சென்றார். ஆசிரியர் குணசேகரன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பாடம் சம்மந்தமாக பிரபாகரனிடம் அவர் கேள்வி கேட்டார். ஆனால் பிரபாகரன் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து குணசேகரன் மாணவன் பிரபாகரனை கன்னத்தில் அறைந்து வகுப்பறையை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். ஆனால் பிரபாகரன் வகுப்பறையை விட்டு செல்ல மறுத்து குணசேகரனை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகர் மீண்டும் பிரபாகரனை கன்னத்தில் மாறி மாறி தாக்கினார். இதில் பிரபாகரன் மயங்கி விழுந்தார்.

உடனடியாக கல்லூரி ஊழியர்கள் பிரபாகரனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அறிந்த கல்லூரி மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறி மாணவரை அடித்து கொன்ற ஆசிரியரை கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், ஆர்.டி.ஓ. பிரியா, தாசில்தார் ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கல்லூரி ஆசிரியர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுத்து அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து குணசேகரனை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் சமாதானம் அடையாத மாணவர்கள் விழுப்புரம்-திருச்சி ரோட்டில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வற்புறுத்தி கேட்ட போதும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் 2 1/2 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். மாணவர்கள் அங்கிருந்து கலைந்து ஓடினார்கள். இதன் பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

Muna Dave said...

ரஜினி கல்வியின் முக்கியத்துவம் பற்றி எப்படி இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த பார்வையை மாற்றிக்கொண்டு பேசுகிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR