Thursday, April 7, 2011

ஒற்றுமையுடன், செயல்பட்டு வெல்ல வேண்டும்-சரத்குமார்.


சிறு சிறு குழப்பங்களை விளைவித்து கூட்டணியை சீர்குலைக்க முயல்கிறார்கள் எதிர்த் தரப்பினர். அதற்கு உடன்படாமல், ஒருமித்து செயல்பட்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

கோவையில் இன்று அதிமுக கூட்டணி சார்பில் வ.உ.சி.மைதானத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசியதாவது...

6 நாட்களில் தேர்தல் வரப் போகிறது. இங்கு புதிய கூட்டணி உருவாகியிருக்கும்போது, புதிய உறவு மலர்ந்திருக்கும்போது, அங்கு சிறு சிறு குழப்பங்களை உருவாக்கி இதை சீர்குலைத்து விடலாமா என்று நினைத்து அது முடியாமல், போன ஏக்கம் எதிர்த் தரப்பிலே இருக்கிறது. எனவே அவர்களுக்கு இடம் கொடுத்து விடாதபடி ஒன்றுபட்டு, ஒருமித்து செயல்பட்டு வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்க வேண்டும்.

இந்த ஐந்து ஆண்டு கால கருணாநிதி குடும்ப ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, விவசாயிகளுக்குப் பாதிப்பு, மாணவர்களுக்குப் பாதிப்பு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு, தொழிற்சாலைகளுக்குப் பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல துயரங்கள். இதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் கடந்த 10 நாட்களாக நான் தென் மாவட்டங்களில், தென்காசி வேட்பாளரான நான் பிரசாரம் செய்யும்போது, எங்கு போனாலும் இரட்டை இலைச் சின்னத்தைக் காட்டி மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். ராசாதான் அந்த ஊழலுக்குச் சொந்தக்காரர். அந்த ஊழல் கட்சிக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. இருவரும் சொந்தக்காரர்கள்.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் இன்று தேர்தலை சந்திக்கிறது திமுக. இது மிகப் பெரிய அவமானம். பக்கத்து வீட்டுக்கு போலீஸ் வந்தாலே அவமானப்படுவோம் நாம். ஆனால் இவ்வளவு பெரிய ஊழலை செய்து விட்டு வெட்கமே இல்லாமல் வாக்கு கேட்க வருகிறார்கள்.

ஊழல் தொடர்பாக முதல்வரின் மனைவியை விசாரிக்கிறார்கள், மகளை விசாரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்கிறார் ப.சிதம்பரம். அதை வழிமொழிகிறார் சோனியா.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதற்காக ஒன்று திரண்டு, ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். மக்களை பணத்தைக் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் ஏமாளிகள் அல்ல, ஏமாறும் நிலையில் மக்கள் இன்று இல்லை.

ஏப்ரல் 13ம் தேதி சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாளாக மலரப் போகிறது. இது நமக்கான தேர்தல் அல்ல, மாறாக வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் சிறப்பாக வாழ வித்திடும் நாளாகும்.

இளம் தலைமுறையினர் சரியான பாதையில் போக வேண்டும் என்றால் தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும், அது புரட்சித் தலைவியின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றார் சரத்குமார்.

கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். விஜயகாந்த் மட்டும் வரவில்லை

No comments: