Saturday, April 9, 2011

லோக்பால் மசோதா கூட்டுக் குழு அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!



96 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டவரைவு திருத்த கூட்டுக்குழு தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியானதைத் தொடர்ந்து தனது 96 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் காந்தியவாதி அன்னா ஹஸாரே.

நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்களின் ஊழலுக்கு எதிராக தற்போது தயாரிக்கப்பட்டு உள்ள லோக்பால் சட்ட வரைவு மசோதாவினால் எந்த பயனும் இல்லை என்றும், அந்த சட்ட மசோதாவை ஆய்வு செய்து சீரமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் 50 சதவீதமும், அரசுத் தரப்பிலிருந்து 50 சதவீத உறுப்பினர்களும் இடம் பெற வேண்டும் என்றும் அன்னா ஹஸாரே கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதன் தலைவராக மத்திய அமைச்சரை நியமிக்கவும் ஹஸாரே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனை மத்திய அரசு ஏற்க மறுத்ததால், அவர் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 4 நாட்கள் அவர் உண்ணாவிரதம் தொடர்ந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும் கேட்டுக் கொண்ட பிறகும் அவர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கவில்லை.

நேற்று அவரது உண்ணாவிரதம் 4 வது நாளை எட்டிய நிலையில், சோனியா காந்தியின் பெரும் முயற்சியால், ஹஸாரேவின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

அரசாணையை எழுத்துப் பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப் போவதாக ஹஸாரே நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழு அரசாணையை இன்று வெளியிட்டது.

இதன் நகல் ஹஸாரேவின் பிரதிநிதிகள் கையில் அளிக்கப்பட்டது.

தனது இந்தப் போராட்டம் மக்களுக்காக நடத்தப்பட்டது என்றும், இதற்குக் கிடைத்துள்ள வெற்றி மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், அன்னா ஹஸாரே தெரிவித்தார்.

பின்னர், அரசு வெளியிட்ட அறிவிக்கையின் பிரதியை கூடியிருந்தவர்களுக்கு எடுத்துக் காட்டினார். மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்

இதைத் தொடர்ந்து, இன்று 10.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதற்கு முன், தன்னோடு உண்ணாவிரதமிருந்த அனைவருக்கும் பழச்சாறு கொடுத்தார் ஹஸாரே. அவர்கள் அருந்தி முடித்த பல நிமிடங்களுக்குப் பிறகு, தனக்கு வந்த அரசின் அறிவிக்கையை படித்துக் காட்டிய பிறகு, பழச்சாறு அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்தார் ஹஸாரே.

இதன் மூலம் அவரது 96 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

காந்தியத்துக்கு கிடைத்த வெற்றி...

இதைத் தொடர்ந்து நாடு முழுக்க வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. இந்திய மக்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றி இது என கொண்டாடி வருகிறார்கள்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி இந்த வெற்றியை கொண்டாடினர்.

இந்த நாட்டுக்கு காந்திய வழிப் போராட்டமே வெற்றியைத் தரும் என்பதற்கு ஹஸாரே ஒரு வாழும் எடுத்துக்காட்டாக உள்ளார். மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான போராட்டத்தின் பின்னால் அணி வகுக்க வேண்டும், என்று ஊழலுக்கு எதிரான அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியானதும், ஹஸாரே உண்ணாவிரதமிருந்த ஜந்தர் மந்தர் பகுதியே கோலாகலமாகியது. மக்கள் வெற்றிக் களிப்பில் உற்சாகக் குரல் எழுப்பினர். வெடிகள் கொளுத்தப்பட்டன.


No comments: