Saturday, April 9, 2011

திராவிட இயக்கத்தை வீழ்த்தவேண்டும். என்பதே ஜெயலலிதாவின் நோக்கம் - விழுப்புரத்தில் கருணாநிதி பேச்சு.


விழுப்புரம் பிரசார கூட்டத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேச்சு

விழுப்புரத்தில் நேற்று இரவு ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:-

எனது அருமை நண்பர் திருமாவளவன் இங்கு பேசும்போது, எதிர்க்கட்சி தலைவரை பார்த்து உங்களுக்கு அதுதெரியுமா, இது தெரியுமா என்றெல்லாம் கேட்டார். சரித்திரம் தெரியுமா என்று கேட்டார். திராவிட இயக்கத்தின் மூலம் தெரியுமா, திராவிட இயக்கத்தை யார், யார் வளர்த்தார்கள் என்று தெரியுமா, இதற்கெல்லாம் ஒரே பதில் திராவிட இயக்கம் என்றால் என்ன என்பதை யாரை பார்த்து கேட்டாரோ அவரிடம் இருந்து பதில் வந்திருந்தால் நான் ஆச்சரியப்பட தேவையில்லை.

திராவிட இயக்கத்தை அழிக்க இன்றைக்கு கொடுவாள் எடுத்து புறப்பட்டிருக்கிறார் ஒரு அம்மையார். திராவிட இயக்கத்தை அழித்தே தீருவேன், பெரியார் உருவாக்கிய சுயமரியாதையை, அண்ணா உருவாக்கிய லட்சிய தாகத்தை அந்த கொடுமைகளை எல்லாம் அறவே புரட்டிப்போட்டு இந்த இயக்கத்தை அழிப்பது தான் எனது வேலை என்று புறப்பட்டிருக்கிறார். அந்த அம்மையார் உங்களிடத்தில் ஆதரவு கேட்பது எதற்கு, ஆட்சி செய்வதற்காக அல்ல. இந்த ராஜ்ஜியத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவருடைய மூல நோக்கம் திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பது தான்.

நானும், காதர்மொய்தீனும் மதத்தால் வேறுபட்டவர்கள். நானும், திருமாவளவனும் பகுப்பால் வேறு பட்டவர்கள். நானும், டாக்டர் ராமதாசும் சமுதாயத்தால் வேறுபட்டவர்கள். இப்படி வேறுபாடுகளையெல்லாம் ஒருமைப்பாடாக ஆக்கிய பெருமை யாருக்கு? தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு. அந்த இயக்கத்தின் சார்பிலே இந்த ஊரிலே பகுத்தறிவு பிரசாரம் நடத்தியபோது 100 பேர் 200 பேரை பார்த்த இந்த இடத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான பேரை பார்த்தபோது நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோமா இல்லையா, சுயமரியாதையுடன் இருக்கிறோமா இல்லையா, அந்த வெற்றிக்கு அடையாளம்தான் இங்கே வீற்றிருக்கின்ற உங்கள் கரவொளி, வாழ்த்து முழக்கம். நாங்கள் வரும்போது எங்களை கண்குளிர பார்த்து வாழ்த்திய முழக்கம்.

எனவே இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான நேரத்தில் உங்களை கேட்டுக்கொள்வது இப்போது காரியம் பெரிது, வீரியம் பெரிதல்ல. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டிய காரியம். மணி 10 ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் மிக கெடுபிடியாக இருக்கிறது. நான் முதல்- அமைச்சராக இருந்தாலும் சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவன். தேர்தல் ஆணையம் உண்மையிலேயே சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை நான் பதவியில் இருக்கும்போது கேட்க விரும்பவில்லை. பதவியை நீங்கள் விலக்கி வைத்தால் அவைகளை யெல்லாம் கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டிய நேரத்தில் நான் கேட்பேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

நேரத்தின் அருமை கருதி உங்களிடத்தில் 3 செய்தியை மட்டும் நான் சொல்கிறேன். 1996-ல் இதே இடத்தில் பா.ம.க. ஒரு மிகப்பெரிய மாநாட்டை போட்டு நமது கலைஞரை அழைத்து அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று ஒரு தனி நாற்காலி போட்டோம். 7 கட்சி கூட்டணியோடு இருந்து அப்போது 96-ல் முதல்வராக வந்தார். இது ஒரு செய்தி. அடுத்து நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்போம் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறேன்.

மே 13-ந் தேதி வாக்கு எண்ணும்போது முதல் முறையாக கவர்னரிடம் தி.மு.க. தலைவர் கலைஞரை ஆட்சி அமைக்க அனுப்புகிற முதல் கடிதம் இந்த ராமதாசிடம் இருந்து தான் செல்லும். அமைச்சர் போட்டியிடுகிற இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். எனக்கு மட்டும் ஒரு நாள் நேரம் இருந்தால் நான் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சுற்றி சுற்றி வந்திருப்பேன்.

இந்த தொகுதியில் எதிர்த்து நிற்கிற வேட்பாளர் டெபாசிட் வாங்கக்கூடாது. இன்னொரு செய்தி ரிஷிவந்தியம் தொகுதியில் சிவராஜை எதிர்த்து நிற்கிற அந்த வேட்பாளரும் டெபாசிட் வாங்கக்கூடாது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.


No comments: