Saturday, April 9, 2011

பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம்: பிரதமர்.


தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 13ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. காங்கிரஸ் கட்சி உள்பட அக்கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன்சிங் தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக, சனிக்கிழமை மாலை கோவைக்கு வந்தார்.

கோவை பீளமேட்டில் உள்ள கொடிசியா வளாக பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,

இந்தியாவின் உயர்வுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானது. கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஒருங்கிணைந்து செயலாற்றியதால் தமிழகம் செழிந்தோங்கியுள்ளது. இங்குள்ள மக்கள் பலன் பெற்றுள்ளனர். கலைஞர் தலைமையில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழை செம்மொழியாக அறிவித்தது, சேலம் ஒருங்கிணைந்த எஃகு ஆலை திறப்பு, சேலம் ரயில்வே கோட்டம் அமைத்தது. சேது சமுத்திர திட்டம் தொடக்கம் போன்றவைகளை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.

ஜவுளி, கல்வி, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மருத்துவத் துறையில் தமிழகம் ஆற்றும் சிறந்த பணியால் இந்தியாவுக்கே பெருமை அடைந்துள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. நாடு மேலும் வளம்பெற காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.


No comments: