Sunday, April 10, 2011

ஜெயலலிதா ஆட்சியில் சாதனை ஏதும் இல்லை: சிதம்பரம்.


ஜெயலலிதா ஆட்சியில் சாதனை ஏதும் இல்லை: சிதம்பரம்.

விருத்தாசலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தி.நீதிராஜனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா ஆட்சியில் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய சாதனைகள் ஏதும் செய்யவில்லை என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பல சலுகைகளை வழங்கி இருக்கிறது. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 8.5 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. 21 ம் நூற்றாண்டின் 11 வது ஆண்டில் இருக்கிறோம். இந்த 11 ஆண்டுகளில் 2 அரசுகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. இதில் 2006 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய எல்லா வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றி இருக்கிறது. விவசாய கடன் ரத்து, கிலோ அரிசி 2 ரூபாய், வீட்டுமனை பட்டா வழங்கியது, இலவச வண்ணத் தொலைக்காட்சி என அத்தனையும் கலைஞர் வழங்கி இருக்கிறார்.

தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது ஜெயலலிதா, கலைஞர் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என கிண்டல் செய்தார். அதிமுகவினர் கூட வியந்து பார்த்தனர். 1 கோடியே 85 லட்சம் பேருக்கு அரிசி, 28 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என அனைத்தையும் வழங்கினார் கலைஞர்.

கலைஞர் தமிழகத்தில் ஆட்சி ஏற்கும்போது ஆண்டுதிட்டமாக ரூ.9600 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கலைஞர் பதவியேற்றதும் முதல் கையழுத்தாக ரூ.7600 கோடி விவசாய கடன்தள்ளுபடி செய்தார். இதைப் பார்த்த மத்திய அரசு தன்பங்குக்கு ரூ.72 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தது. மத்திய அரசுக்கு கலைஞர் வழிகாட்டியாக அமைந்தார்.

கலைஞர் சொல்லாததையும் செய்தார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் கலைஞர் சொல்லாததையும் செய்தார். அதுதான் கலைஞர் வீடுவழங்கும் திட்டம். இதில் தற்போது 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 21 லட்சம் வீடுகள். அடுத்த 6 ஆண்டுகளில் மீதம் உள்ள வீடுகள் கட்டித்தர உறுதி பத்திரம் வழங்கியுள்ளார். 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது எல்லாம் கருணாநிதியின் சரித்திரம் போற்றும் சாதனைகள்.

ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் என்ன நடந்தது. மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய சாதனைகளை ஏதேனும் செய்திருக்கிறாரா? கடந்த சில நாள்களாக நடைபெறும் கூட்டத்தில் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகிறேன். இதுவரை பதில் இல்லை.

மேலும், 1.5 லட்சம் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தது, எஸ்மா, டெஸ்மாவில் கைது செய்தது, திருமண உதவித்தொகை நிறுத்தியது, மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தது, குல சாமி கோயில்களில் "ஆட்டுக் கிடா' வெட்டுவதற்கு தடைசெய்தது. இதைத்தவிர ஜெயலலிதா ஆட்சியில் வேறு சாதனை நினைவுக்கு வரவில்லை என்றார்.

காப்பியடித்த ஜெயலலிதா.: ப.சிதம்பரம்.

கரூர் தொகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில், காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா என, ப.சிதம்பரம் பேசினார்.

கடந்த 2009ல் லோக்சபா தேர்தலில் சாதனை முன்னிறுத்தி ஓட்டு கேட்டோம். அப்போது, ஆளும்கட்சியாக உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராது என்று ஆரூடம் கூறினர். முடிவில், ஆரூடம் பலிக்கவில்லை. சாதனைதான் பலித்தது. பணத்துக்கு ஓட்டில்லை; குணத்துக்கு தான் ஓட்டு. ஐந்து ஆண்டு கழித்து திரும்பி பார்த்தால் ஜாதி, மதம், பணம், குடும்பம் எதுவும் தேர்தலில் எடுபடாது.

கடந்த தேர்தலில் தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதி, "அரசியல் ஆத்திச்சூடி' போன்றது. 9,600 கோடி ரூபாய் பட்ஜெட் போடும் தமிழக அரசு, 7,500 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்தது. இதைக்கண்டு, மத்திய அரசும், 72 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை நாடு முழுவதும் தள்ளுபடி செய்தது. அரசு என்றால் வளர்ச்சியும், வசதியும் இருக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சி ஓர் இருண்டகாலம்.

இப்போதைய தேர்தல் அறிக்கையில் அம்மிக்கல்லுக்கும், ஆட்டுக்கல்லுக்கும் டாட்டா காட்டியவர் கலைஞர். இதை காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. கிரைண்டர் அல்லது மிக்சி தருவதாக கலைஞர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும், "அல்லது' என்பதை நீக்கி, இரண்டுமே தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

No comments: