Sunday, April 10, 2011

இலங்கையை வீழ்த்திய இந்திய வீரர்களுக்கு பரிசு கொடுக்கத் தடை., ஜெயலலிதா ஆட்சியில் தேர்தல் கமிஷனரின் நிலை - கலைஞர்


கடலூர் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இலங்கையை வீழ்த்திய இந்திய வீரர்களுக்கு பரிசு கொடுக்கத் தடை.

உங்களுக்கு தெரியும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றிபெற்றது. வெற்றியை பெற்றிருக்கிறது என்று சொல்கிறபோதே இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறீர்களே, நாள்தோறும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளைப் பார்த்து பூரிப்படைகிறேன் நான். எந்த ராத்திரியிலும் டி.வி.யின் முன்னால் அமர்ந்து கிரிக்கெட்டை நான் பார்த்து மகிழ்வேன். இந்தியாவுக்கு மகத்தான வெற்றி. அதுவும் எப்படிபட்ட வெற்றி இலங்கையை முறியடித்து பெற்ற வெற்றி. அந்த வெற்றியை இந்திய அரசு கொண்டாடுகிறது. பரிசு கொடுக்கிறது. மாநில அரசுகள் பல அவர்களுக்கு பரிசு வழங்குகிறது.

இதையெல்லாம் பார்த்தபோது எனக்கு, இயல்பாகவே கிரிக்கெட் பிரியன் நான். அதிலே இந்தியா வெற்றிபெற்று இருக்கிறது என்று சொல்லும்போது நானும் அந்த கிரிக்கெட் அணிக்கு ரூ.3 கோடி ரூபாய், அதிலே ஆடி வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி என மொத்தம் ரூ.4 கோடியை அரசின் சார்பில் தருகிறோம் என்ற செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்தேன்.

இந்த 4 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் கிரிக்கெட் அணிக்கும், ஒரு கோடி ரூபாயை அஸ்வினுக்கும் தருகிற கோப்பை நான் தலைமை செயலாளருக்கு அனுப்பினேன். என்னுடைய கையெழுத்தை போட்டு, தலைமை செயலாளர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உத்தரவையும் போட்டேன்.

அவர்கள் தேர்தல் கமிஷனை கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், கொடுப்பது சரி, ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை, முதல் அமைச்சர் அழைத்து, அவர் அதை தன் கையால் கொடுக்கக்கூடாது, நான் கொடுத்தால், அது தேர்தல் பிரசாரம் ஆகி விடுமாம். அப்படியானால், உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் பார்த்ததை, கைகொட்டி, வாழ்த்தி, அவர்களை பாராட்டிய அந்த செய்தியை, நான் சொல்லக் கூடாதாம். அப்படி நான் கொடுத்தலும் அதை யாரும் போட்டோ எடுக்கக் கூடாதாம். இப்படி ஒரு ஆணையம். இதுபோல தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது என்றால் எனக்கே சந்தேகம்? யார் முதல் அமைச்சர்?, நான் தானா? என்று எனக்கே ஒரு பிரச்சனை வந்து விட்டது.

ஜெயலலிதா ஆட்சியில் தேர்தல் கமிஷனரின் நிலை.

எனக்கு முன்பு தமிழக அரசை ஆண்டு கொண்டு இருந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தேர்தல் கமிஷனை எப்படி மதித்தார்கள் என்பது தெரியும். தேர்தல் கமிஷனில் இருந்த அந்த பெரிய அதிகாரி, இவருக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதற்காக விமான நிலையத்திலே அவர்களை அடித்து உதைத்தார்கள், யாரை, தேர்தல் கமிஷனரை, அந்த தேர்தல் கமிஷனர் யார்?, டி.என்.சேஷன், அவரை விமான நிலையத்தில் ஓடஓட விரட்டி அடித்தார்கள்.

அவர் பதுங்குவதற்கு இடம் இல்லாமல் ஒரு காருக்குள் ஓடி புகுந்து கொண்டு, அந்த காரில் சென்று ஒரு ஓட்டலில் இறங்கி, அந்த ஓட்டலில் ஒரு ரூமுக்குள் புகுந்த கொள்ள, அந்த ரூமுக்குள்ளேயும் போய் அடித்து உதைத்தார்கள், அந்த ஓட்டலையும் நொறுக்கினார்கள். இதெல்லாம் தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற உபசாரங்கள், அவர் நடத்திய திருவிளையாடல், நாம் அப்படியெல்லாம் நடக்கவும் இல்லை, அதை ஏற்கவும் இல்லை, அதை ஆதரிக்கவும் இல்லை, அதை அப்போதே எதிர்த்து அறிக்கை விட்டோம். தேர்தல் கமிஷனரை அப்படி நடத்தி இருக்கக்கூடாது என்று அப்போதே சொல்லி இருக்கிறோம்.

ஆனால் இன்றைக்கு நாம் முறைப்படி தேர்தல் கமிஷனோடு சுமுகமாக போனாலும், ஒவ்வொன்றையும் அவர்களை வைத்து செய்ய வேண்டும், என்ற நிலைமையில் இருந்தாலும் கூட, வெளிப்படையாக, முதல் அமைச்சராக நாம் ஆகிவிடுவோமோ என்ற நம்பிக்கையில், மமதையில், அந்த தெம்பில், இப்போதே உத்தரவிடுகிறார். நல்லவேளை, உடனடியாக கருணாநிதியை முதல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விடு என்று சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை இன்றறைக்கு தேர்தல் கமிஷனால் ஏற்பட்டு இருக்கும் போது, தேர்தல் கமிஷன், இந்த குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

நான் மத்திய சர்க்காருக்கு சொல்கிறேன். தேர்தல் கமிஷன் நினைத்தால் பிரதமரைக்கூட கண்டிக்கலாம். பிரதமர் கூட தேர்தல் கமிஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியது தான், அதன் விதிமுறை அது தான்.

ஆனால் அப்படிப்பட்ட விதிமுறைகளை அப்படிப்பட்ட அதிகாரங்களை அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை பெற்று இருக்கிற ஒரு மகத்தான நிறுவனம், புனிதமான நிறுவனம், என்று சொல்லப்படுகின்ற, அந்த தேர்தல் கமிஷனை எப்படி அமைப்பது? யார் யாரைக்கொண்டு அமைப்பது, எந்த வகையில் அமைப்பது, அதற்குரிய அதிகாரங்களை எப்படி அமல்படுத்துவது என்பதையெல்லாம் கொண்ட ஒரு நிலையை இனியாவது ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று இந்த மாபெரும் கூட்டத்தின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் பேசினார்.

No comments: