Sunday, April 10, 2011

ஜெ., மீது வழக்கு தொடருவேன் : வீரபாண்டி ஆறுமுகம் பரபரப்பு பேட்டி


"பொது வாழ்வுக்கு தகுதியில்லாதவர் ஜெயலலிதா. தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும் அவதூறு பரப்பும் அவர் மீது, நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன்,'' என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

சேலத்தில், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, அவரது கட்சி வேட்பாளர்கள் மன சாட்சியை அடகு வைத்து விட்டு, தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும், உண்மைக்கு மாறான பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். சங்ககிரி மற்றும் வீரபாண்டி அ.தி.மு.க., வேட்பாளர்கள், தேர்தல் விதிமுறைக்கு மாறாக, எனக்கும், தி.மு.க.,வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், "சிடி' ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, கடந்த 8ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டரிடத்தில் மனு அளித்துள்ளேன்.

"சிடி'க்கும், எனக்கும் துளி அளவும் சம்பந்தமில்லை. தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்கிறது என்றால், உடனடியாக இரண்டு வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு இல்லாவிடில், சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வேன். ஏற்கனவே, இதுபோல் பிரசாரம் நடக்க உள்ளது குறித்து, கடந்த 28ம் தேதி, கலெக்டரிடம் புகார் செய்துள்ளேன்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்ததாக கூறுகிறார். அவர் பிழைப்பு தேடி வந்த இடம் அது. கலைத்துறையில் அவர் எப்படியெல்லாம், யாருடனெல்லாம் நடித்தார் என்பதை கூறும் கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கி விடவேண்டாம். 14 வயதில் பள்ளி படித்துக் கொண்டிருந்தபோதே, தமிழ் மொழி பாதுகாவலராகவும், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி, தமிழுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி.

அவரைப் பற்றி அவதூறு பரப்பினால், மானமுள்ள எந்த தி.மு.க.,வினரும் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க மாட்டான். இரண்டு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, டான்சி நில ஊழல் வழக்கில், தான் கையெழுத்திடவில்லை எனக் கூறி ஏமாற்றினார். 64 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து மீளமுடியாமல் உள்ளார். தமிழகத்தை ஆளும் யோக்கியதை அவருக்கு இல்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,வை புறக்கணித்து, சேலத்தில், 11 சட்டசபை தொகுதியிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். வெற்றியை தாங்க முடியாததால் தான் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சேலம் அங்கம்மாள் காலனி பிரச்னை, ஆறு பேர் கொலையில் எனக்கும், இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ஆனால், அதை தொடர்புபடுத்தி பொய் பிரசாரம் செய்கின்றனர். உண்மையை கூற வேண்டுமென்றால், குப்புராஜுக்கும், அவரது மகன் சிவகுருவுக்கும் சொத்தில் பாகப்பிரிவினை ஏற்பட்டு, 10 ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் சிவில் வழக்கு இருந்தது. அதனால் ஏற்பட்ட மனக்கசப்பால், கொலை நடந்ததாக சிவகுரு வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

சம்பவம் நடப்பதற்கு முன்னால், தந்தை சொத்து தராமல் ஏமாற்றி விட்டார். அந்த பிரச்னையில் எனக்கு உதவ வேண்டும் என, வக்கீல் அய்யப்பமணியை தொடர்பு கொண்டுள்ளார். வீடு ஒன்றை தாதகாப்பட்டியில் உள்ள சேலம் மாநகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் சுகுமாறனிடம் விற்று, அந்த பணத்தை மருமகனிடம் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கொலை சம்பவம் நடந்துள்ளது. அய்யப்பமணியிடம் என்ன செய்வது, எந்த வக்கீலை பார்ப்பது என்று கேட்டுள்ளார், அவரும் ஒரு வக்கீலை கூறியுள்ளார். அதன்பின், சிவகுரு, நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவருக்கு அதில் தொடர்பு இருக்கும் நிலையில், அதை மறைத்து விட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். நான் சிறையில் சென்று பார்த்தது தவறு என்கின்றனர். நீதிமன்றத்தில், எப்.ஐ.ஆர்., இருக்கும் நிலையில், அவர் குற்றவாளியாகிவிடமாட்டார்.

தர்மபுரி பைத்தூரில், மூன்று மாணவியர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் ஜெயகுமாரும், செங்கோட்டையனும் போய் அவர்களை பார்த்துள்ளனர். அதற்கு யார் அனுமதி கொடுத்தது ஜெயலலிதா தானே. பொது வாழ்வுக்கு தகுதியில்லாதவர் ஜெயலலிதா. தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும் அவதூறு பரப்பும் அவர் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இவ்வாறு பேட்டியின்போது அமைச்சர் கூறினார்.

என் மீது அவதூறு அ.தி.மு.க., வக்கீல் பதில் : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறிய குற்றச்சாட்டு குறித்து, அ.தி.மு.க., சேலம் வடக்கு தொகுதி செயலரும், வக்கீலுமான அய்யப்பமணி கூறியதாவது: ஆறு பேர் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, 2010 அக்., 24ம் தேதி கவர்னருக்கு மனு அனுப்பி உள்ளேன். அந்த கொலைக்கு எனக்கும் சம்பந்தமில்லை. பார் கவுன்சில் தேர்தலில் ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வாங்கியிருந்தேன். அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தேர்தலில் வெற்றி பெற்றதை பொறுக்காமல், என் மீது அவதூறு பரப்புகின்றனர். நானும் சட்டப்படி அவர்களை சந்திப்பேன். இவ்வாறு அய்யப்பமணி கூறினார்.



No comments: