Sunday, April 10, 2011

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி - வடிவேலு.


கடலூர் விருத்தாச்சலத்தில் தேனாறு ஓடும், பாலாறு ஓடும் என்றார் விஜயகாந்த். ஆனால் ஒரு ஆறும் ஓடவில்லை. அதற்குத்தான் மக்களவைத் தேர்தலில் தேமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுத்து விட்டார்கள். இப்போது ரிஷிவந்தியத்தில் நிற்கிறார், அங்கும் சுத்தமாக துடைத்தெடுத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

திமுக வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரசாரம் செய்து, விஜயகாந்த்தை மட்டும் குறி வைத்து தாறுமாறாகப் பேசி விமர்சனம் செய்து வருகிறார் வடிவேலு. இதனால் தேமுதிகவினர் கடும் கொதிப்புடன் உள்ளனர். இருப்பினும் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிவினர் ஒட்டுமொத்தமாக அமைதி காத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை சிதம்பரம் சென்ற வடிவேலு அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், என்னை வெடிகுண்டு வைத்துக் கொன்று விடுவார்கள் என பயமுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. அய்யா கலைஞர் போட்டுள்ள திட்டங்கள்தான் அவர்களுகக்கு வெடிகுண்டுகள். அதில் அவர்கள்தான் சிக்கிக் கொள்ளப் போகிறார்கள்.

அய்யா கலைஞரும், பொதுமக்களும் எனக்குத் துணையாக, பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் இருக்கும் வரை எந்த பாமும் என்னை ஒன்றும் செய்யாது. எனது நிழலைக் கூட அவர்களால் தொட முடியாது.

ரிஷிவந்தியத்தில் இப்போது நிற்கிறார் அவர். இனிமேல்தான் அங்கு சூடு பிடிக்கப் போகிறது. விருத்தாச்சலத்தில் ஏற்கனவே போட்டியிட்டபோது பாலாறு ஓடும், தேனாறு ஓடும் என்றார். ஆனால் ஒரு ஆறும் ஓடவில்லை.

சட்டசபைத் தேர்தலில் வாங்கிய 61,000 ஓட்டுக்களில் பாதியைக் கூட கடந்த லோக்சபா தேர்தலில்அங்கு தேமுதிக வேட்பாளர் வாங்கவில்லை. தேமுதிக 13,000 ஓட்டுகள் வாங்கியது. இப்போது ரிஷிவந்தியத்தில் சுத்தமாக துடைத்தெடுக்கப் போகிறார்கள். ஒன்றும் கிடைக்காது. டெபாசிட் கூட மிஞ்சாது.

அண்ணா, காமராஜர், பெரியார் ஆகியோரின் ஒட்டுமொத்த உருவம்தான் கலைஞர். அவரை மக்கள் மீண்டும் முதல்வராக்குவது உறுதி என்றார் வடிவேலு.

பின்னர் காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், புவனகிரியில் பிரசாரம் மேற்கொண்டார் வடிவேலு.


No comments: