Wednesday, April 20, 2011

நாவரசு கொலை வழக்கு : ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் த‌ண்டனை உறுதி - உச்ச நீதிமன்றம்.


தமிழகத்தையே உலுக்கிய நாவரசு கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வழக்கை சரியாக விசாரிக்காமல் ஜான் டேவிட்டின் தண்டனையை செ‌ன்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்ற மாணவன் நாவரசு. இவர், செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌ன்.

‌விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசுவை, 1996ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல் காணவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடினர்.

விசாரணையில் அதே கல்லூரியில் படித்து வந்த ஜான்டேவிட் என்ற மாணவர் தான் நாவரசுவை ராகிங் செய்து, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு படுகொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார்.

ஜான்டேவிட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சென்னை தாம்பரத்தில் ஒரு பஸ்சில் இருந்த சூட்கேசில் இருந்து நாவரசுவின் உடல் துண்டுகளை கைப்பற்றினர்.

இந்த வழக்கை விசாரித்த சிதம்பரம் செசன்ஸ் நீதிமன்றம் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான்டேவிட் தரப்பு மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றம் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, ஜான்டேவிட்டை விடுதலை செய்தனர்.

ஜா‌ன்டே‌வி‌ட்டின் இந்த ‌விடுதலையை எ‌‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 2002ஆம் ஆண்டு மே‌ல்முறை‌யீடு தாக்கல் செ‌‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த மனுவை ‌விசா‌‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ ‌நீ‌திப‌திக‌ள் முகு‌ந்த‌ம் ஷ‌ர்மா, அ‌னி‌ல் தபே ஆ‌கியோ‌ர் இ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

மாணவ‌ர் நாவரசு கொலை வழ‌க்‌கு விசாரணையில் செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்றத்தின் செய‌ல்பாடு குறித்து அ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ ‌‌நீ‌திப‌திக‌ள், ஜா‌ன் டே‌வி‌ட்‌டு‌க்கு கடலூர் நீதிமன்றம் விதித்த இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை செ‌ல்லு‌ம் எ‌ன்று தீர்ப்பளித்தனர்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. அத்துடன் ஜான்டேவிட்டின் ஜாமீனை ரத்து செய்து, மேலும் ஜா‌ன்டே‌வி‌‌ட் உடனடியாக கடலூர் சிறைச்சாலை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று்ம் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

இந்த வழக்கில் சூழ்நிலை ஆதாரங்கள் ஜான்டேவிட் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வழ‌க்கை ச‌ரியாக ‌விசா‌ரி‌க்காம‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் ஜா‌ன்டே‌வி‌ட்டு‌க்கு இ‌‌ட்டை ஆயுளை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்ததை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌ம் ‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

No comments: