Wednesday, April 20, 2011

அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது ! சுப்பிரமணிய சாமி.


தமிழக தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ள அதிக வாக்குகளை, குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் சாதகமாக கருத முடியாது. இந்த முறை அதிமுகவால் பெரிய வெற்றியைப் பெற முடியாது, என்று சுப்பிரமணியசாமி கூறினார்.

ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சாமி, "தமிழக சட்டசபை தேர்தல் முடிவைப் பொருத்த வரையில், அ.தி.மு.க. கூட்டணி வெற்றிவாய்ப்பு பெரிதாக இல்லை என்றே எனக்குத் தெரிய வந்துள்ளது.

அதிகபட்சம் இரு கட்சிகளுக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் 10 தொகுதிகள் என்ற அளவிலேதான் இருக்கும்.

இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதால் அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதிவிட முடியாது. அதேபோல் தான் புதிய வாக்காளர்களின் ஓட்டுகளும். வாக்காளர்கள் ஓட்டுபோடுவதற்கு ஆர்வமாக வந்திருக்கலாம். ஆனால் இவர்கள் அதிமுகவுக்கு சாதகமாக ஓட்டளித்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

இந்த முறை தேர்தல் ஆணையத்தின் பணிகளும் பரவாயில்லை. அதற்குமேல் பாராட்ட பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அதிமுகவினரும் தேர்தலில் பணத்தை தாராளமாக செலவழித்துள்ளனர். அதை ஆணையம் பெரிதுபடுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

2ஜி குற்றவாளிகளுக்கு தண்டனை

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. அடுத்த கட்ட விசாரணை மே மாதம் நடைபெறும். ஸ்பெக்ட்ரம் வழக்கை தனிப்பட்ட முறையில் நானும் எடுத்து நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் எனக்கு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே சி.பி.ஐ. இந்த வழக்கை கையாண்டு வரும் நிலையில் வெளியில் இருந்தும் ஒருவர் வழக்கை நடத்துவது சி.பி.ஐ.க்கு புதிது ஆகும். இது தொடர்பாக சி.பி.ஐ. 2 வாரம் காலஅவகாசம் கேட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றவாளிகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தண்டனை வழங்கப்பட்டுவிடும்.

சோனியா மீது வழக்கு

போபர்ஸ் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி மீது வழக்கு தொடர பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அனுமதி கேட்டு 204 பக்க மனு ஒன்றை கடந்த 15-ந்தேதி கொடுத்துள்ளேன். இதுகுறித்து பிரதமர் ஜுலை 15-ந் தேதிக்குள் எனக்கு பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் 2ஜி விஷயத்தில் செய்தது போல உச்சநீதிமன்ற உதவியை நாடுவேன்.

எடியூரப்பா விவகாரம்

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். பிரச்சினைக்கு காரணமான ரெட்டி சகோதர்களின் அரசியல் தந்தைகள் டெல்லி காங்கிரசில் இருக்கிறார்கள். எனவே, எடியூரப்பா மீது காங்கிரசார் எப்படி குற்றம்சொல்ல முடியும். எடியூரப்பாவை ராஜினாமா செய்யக்கோரி அவர்கள் கேட்பது தவறானது.

தமிழக தேர்தல் முடிவு

லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக சேவகர் அன்னா ஹசாரே தேசப்பற்றுமிக்கவர். அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர். ஹசாரே, நமது நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அவரைச்சுற்றி அரசியல்வாதிகளும் போலி தொண்டுநிறுவனங்களின் நிர்வாகிகளும் உள்ளனர். தனது பணியின் மூலம் இப்படிப்பட்டவர்கள் அனுகூலம் அடைந்துவிட ஹசாரே அனுமதித்துவிடக்கூடாது", என்றார்.


No comments: