Wednesday, April 13, 2011

'அவாள்' ஆசை பலிக்காது. திமுக 200 தொகுதிகளைப் பெறும்!- மு.க. அழகிரி.


திமுகவுக்கு எதிராக 'அவாள்'களும் தேர்தல் ஆணையமும் செய்த வேலைகள் பலிக்கவில்லை. இந்தத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும், என்றார் மத்திய அமைச்சர் முக அழகிரி.

மதுரை முத்துப்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஓட்டு போட்டார். அவருடன் அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த மு.க.அழகிரி கூறுகையில், "தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. 6வது முறையாக கலைஞர் முதல்வராவார். தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் மட்டும் 40ல் இருந்து 45 தொகுதிக்குள் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

தி.மு.க.வினர் பணப் பட்டுவாடா செய்து வருவதாக எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். அது அவர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.

தி.மு.க. வேட்பாளர்கள், நிர்ணயித்த தொகையை கூட செலவு செய்ய முடிய வில்லை. தி.மு.க. தனது சாதனைகளையும், தேர்தல் அறிக்கைகளையும் கூறி பொதுமக்களிடம் பிரசாரம் செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் பல்வேறு கெடுபிடிகளை விதித்தது. தி.மு.க. வெற்றியை தடுத்து நிறுத்தி அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வருவது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடாக இருந்தது. இதற்காக 'அவாள்'ளாம் ரொம்ப தீவிரமாக வேலை செய்தனர். ஆனால் மக்கள் ஆவல் திமுக மீதுதான் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்," என்றார்.


No comments: