தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதை தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
இந்தப் பதவிகள் மீது கண் வைத்து இத்தனை நாட்களாக அதிமுகவை எந்த வகையிலும் விமர்சிக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
அதே போல அதிமுகவுக்கே குளிர் ஜுரம் வரும் அளவுக்கு ஆட்சியைப் பாராட்டி குவித்து வரும் இடதுசாரிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர்.
தேமுதிகவைப் பொறுத்தவரை மதுரை, சேலம் மாநகராட்சிகள் உள்பட 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை குறி வைத்திருந்தது. அந்த இடங்களையும் முக்கிய நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் பதவிகளையும் கேட்டுப் பெறும் வரை அதிமுக ஆட்சியை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை என்ற 'கொள்கையுடன்' சட்டசபையில் செயல்பட்டது தேமுதிக.
ஆனால், எப்படி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிகவையே கேட்காமல் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி முதலில் ஒரு லிஸ்ட் வெளியிட்டதோ, அதே ஸ்டைலில் இப்போதும் செயல்பட்டுள்ளது அதிமுக.
அதாவது, 10 மேயர் பதவிகளும் எங்களுக்கே. உங்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
அதே போல மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு மேயர் பதவி கூட கிடையாது என்றும் சொல்லப்பட்டுவிட்டது.
இதனால் இந்தக் கட்சிகளும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
No comments:
Post a Comment