Monday, May 2, 2011

சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை.


சீனாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் புகை பிடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சீனாவில் உள்ளனர்.

இங்கு புகை பிடிப்பதால் ஏற்படும் வியாதிகளால் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் இறக்கின்றனர்.

ஆனால் சீனாவில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அந்த தடையை மீறுபவர்களுக்கு சட்டத்தில் எவ்வித தண்டனையும் இல்லை என்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ரயில் நிலையங்கள், காட்சியரங்கங்கள் போன்ற இடங்களில் புகை பிடிக்க தடை விதிப்பட்டிருந்தாலும், அலுவலகங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படவில்லை.

தங்களுடைய பணியாளர்களுக்கு புகை பிடிப்பதால் ஏற்படும் பாதகங்கள் குறித்து எடுத்து கூற வேண்டிய கட்டாயம் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு உள்ளது. ஆனால் பணியாளர்கள் அலுவலகத்தில் புகை பிடிப்பதை தடுக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை.

இதே போன்ற சட்டத்தை கடந்தாண்டு ஷாங்காய் அமல்படுத்தியது. ஆனால் ஒருவரும் அதை சட்டை செய்வதாக தெரியவில்லை. பெரும்பாலும் நீங்கள் எங்காவது விடுதியில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, யாராவது அருகில் வளையம் வளையமாக புகை விடுவது ஒன்றும் நின்றபாடில்லை.

ஏனென்றால் சட்டத்தில், புகை பிடிக்கும் சட்டத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்று கூறப்படவில்லை.

இதனால் பெரும்பாலான வியாபார உரிமையாளர்கள் புகை பிடித்தலை தடுக்க அதிகாரிகள் எடுக்கும் முயற்சியை வரவேற்பதில்லை. ஏனென்றால் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் இந்த தடையை விரும்பால், உரிமையாளர்களிடம் புகார் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான சீனர்களுக்கு புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தெரியவில்லை. நான்கில் ஒருவருக்கே புகை பிடித்தல் அல்லது சுவாசித்தலால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெரிகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

புகை பிடித்தலை தடுக்கவும், அதனால் ஏற்படும் மரணங்களை தடுக்கவும் தாங்கள் முயற்சிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், அரசாங்க நிறுவனமே சீனாவில் சிகரெட் தயாரித்து விற்பனை செய்து வருவதில் பெரும் லாபம் பார்த்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: