Monday, May 2, 2011

அமெரிக்கப் படையினருடன் நேரடியாக சண்டை போட்ட பின்லேடன் : கொண்டாட்டமும் - அமைதியும்.


அமெரிக்கப் படையினருடன் நேரடியாக சண்டை போட்ட பின்லேடன்.

இந்த மோதல் குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அது தன்னை சரமாரியாக தாக்கிய அமெரிக்கப் படையினருடன் துப்பாக்கி ஏந்தி பின்லேடனே நேரடியாக சண்டை போட்டார் என்பதுதான்.

பின்லேடன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நடமாடவே முடியாத நிலை. சர்க்கரை வியாதி அதிகரித்து விட்டது என்றெல்லாம் சில காலத்திற்கு முன்பு வரை செய்திகள் வந்து கொண்டிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் அமெரிக்கப் படையினர் பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கியபோது படு துணிச்சலாக துப்பாக்கி ஏந்தி நேரடியாக சண்டை போட்டுள்ளார் பின்லேடன். அப்போதுதான் அவர் துப்பாக்கியால் சல்லடை போல துளைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

பக்ராம் விமான தளத்தில் லேடன் உடல்:

கொல்லப்பட்ட பின்லேடன் உள்ளிட்டோரின் உடல்கள் பக்ராம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து அமெரிக்கா யோசித்து வருகிறது. விரைவில் பத்திரிக்கையாளர்களை அனுப்பி பின்லேடன் உடலைப் பார்வையிட அமெரிக்க ராணுவம் அனுமதிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, கொல்லப்பட்ட பின்லேடனின் முகம் மட்டும் புகைப்படமாக அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. அதில் முகம் சல்லடையாக துளைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.


அமெரிக்காவின் கொண்டாட்டமும் - பாகிஸ்தானின் அமைதியும்.

பின்லேடனின் மரணம் குறித்த செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தவுடன் அமெரிக்காவில் பெருத்த கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. ஆனால் அதற்கு நேர் மாறாக பாகிஸ்தானில் பெருத்த அமைதி நிலவுகிறது. குறிப்பாக அரசுத் தரப்பும், ஊடகங்களும் இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை.

பாகிஸ்தான் அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலோ, கருத்தோ வெளியாகவில்லை. பாகிஸ்தான் மீடியாக்களும் இந்த சம்பவம் குறித்து முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிடவில்லை.

பாகிஸ்தானின் புகழ் பெற்ற தி டான் செய்தித்தாளின் இணையம் செயல்படவே இல்லை. தொழில்நுட்பக் கோளாறு என்று அதற்கு காரணம் கூறியுள்ளது டான். அதேபோல தி நேஷன்.காம், தி டெய்லி டைம்ஸ் இணையதள்களும் கூட பின்லேடன் குறித்த செய்திகளை விரிவாகத் தரவில்லை.

பின்லேடன் குறித்த செய்தியை இவர்கள் நம்பவில்லையா அல்லது பாகிஸ்தானின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டதே என்ற தர்மசங்கடம் காரணமாக அமைதி காக்கிறார்களா என்பது புரியவில்லை.

No comments: