Monday, May 2, 2011

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம்: “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் முறையற்ற தண்ணீர் பயன்பட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாகும் அபாயம் உள்ளதாக “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகமும், குமரி அறிவியல் பேரவையும் இணைந்து இளம் விஞ்ஞானிகளுக்கான “நீரும் வாழ்வும்“ என்ற ஒரு நாள் கருத்தரங்கை காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடத்தியது.

கடந்த ஜீன் மாதம் முதல் டிசம்பர் வரை பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஆயிரம் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற 53 மாணவ, மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்து பச்சை, மெரூன், புளு, மஞ்சள், சிகப்பு என 5 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரு விஞ்ஞானியை நியமித்து பூமியும் தண்ணீரும், தண்ணீரும் மாசும், நீரும் வாழ்வும், தண்ணீரும் எதிர்காலமும், தண்ணீர் பிரச்சனைகள் ஆகிய 5 தலைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு இளம் விஞ்ஞானி குழுவிற்கும் ஒரு தலைப்பை கொடுத்து அந்த தலைப்பிற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்து ஆய்வு பணிகளை செய்தனர்.

ஆராய்ச்சி செய்த ஆய்வறிக்கையை நீரும் வாழ்வும் என்ற தலைப்பில் 355 பக்க அளவில் புத்தகமாக வெளியிட்டனர். இந்த புத்தக வெளியீட்டு விழாவும், 53 இளம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த ஆய்வறிக்கையை சமர்பிக்கும் விழாவும் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் சோம.ராமசாமி வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேந்திரபுரியில் உள்ள “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது:-

உலகளவில் உள்ள தண்ணீரில் 3 சதவீதம்தான் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் 0.26 சதவீதம் மட்டுமே சுத்தமான தண்ணீர் இதை வைத்துதான் விவசாயம், குடிநீர் தேவை, கால்நடைகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிவற்றிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

உணவு பாதுகாப்பு, உயிர் சூழல், தண்ணீர் ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளவை, பூமியில் தண்ணீர் அளவு 1.4 பில்லியன் கிலோ மீட்டர் கியூப் ஆக உள்ளது. இவற்றில் 70 சதவீதம் பணிக்கட்டியாக உள்ளது. 30 சதவீத தண்ணீர் பூமிக்கு அடியில் உள்ளது. மொத்த 30 சதவீத தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்திற்கும், 22 சதவீதம் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், 8 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம்.

இந்த தண்ணீரை மாசு அல்லது பற்றாகுறை ஏற்படுவதற்கு காரணமாக மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல், பருவநிலை மாற்றம், மனித இனம் தண்ணீரை அதிக அளவு பயன்படுத்துவது, மாசுபடுத்துவது ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவதால் பற்றாகுறை ஏற்பட வாய்ப்பாக உள்ளது. 2025-ம் ஆண்டில் 1800 மில்லியன் மக்கள் அதிகரிக்கபட வாய்ப்பு உள்ளது. அப்போது தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் நிலை உருவாகும். தற்போது 894 மில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது இல்லை. இரண்டரை மில்லியன் மக்களுக்கு சுகாதாரமற்ற நிலையில் உள்ளனர்.

தினசரி 2 மில்லியன் மக்கள் தங்களது மனித கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுகின்றனர். வளரும் நாடுகள் 70 சதவீத தண்ணீர் சுத்திகரிக்காமல் வீனாக போய்கிறது. அதிகளவு வீட்டு உபயோகத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவது, தொடர்ச்சியாக மணல் அள்ளுவது, வளர்ந்து வரும் தொழிற்சாலை, மின் உற்பத்தி, இவைகள் தண்ணீரின் தன்மையை மாற்றி விடுகிறது.

இதனால் உயிர் சூழல் பாதிப்படைந்து மனித சுகாதாரம் கேள்விகுறியாகிறது. உலகளவில் தண்ணீர் வளம் உள்ள நாடு இந்தியாதான். ஆனால் மேற்கண்ட தண்ணீர் தேவைகள் மற்றும் முறையற்ற தண்ணீர் பயன்பாட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாக மாறும் அபாயம் உள்ளது.

இதனை மாற்ற மழைநீர் சேகரிப்பு, சிக்கனமான உபயோகம், தண்ணீரை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.

நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் நாராயணசாமி, இஸ்ரோ அமைப்பின் மருத்துவ அலுவலர் திரவியம், குமரி அறிவியல் பேரவை ஒருங்கிணைப்பாளர் வேலயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் இளம் விஞ்ஞானிகள் 53 பேர் கலந்து கொண்டு தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தனர்.

1 comment:

மனோவி said...

இப்பவே மாரி காலம் மாறி பொழிந்து வருகிறது..
சில வேளைகளில் பொய்த்தும் வருகிறது இதில் இப்படி ஒரு அபாயமா?