Monday, May 2, 2011

ஊழலை ஒழிக்க சபதம் : மெரீனாவில் திரண்ட இளைஞர் பட்டாளம்.

அன்னா ஹசாரேக்கு ஆதரவாக மெரீனாவில் திரண்ட இளைஞர் பட்டாளம்: ஊழலை ஒழிக்க சபதம்

ஊழல்... ஊழல்... எங்கும் ஊழல்... எதிலும் ஊழல்... இதை கேட்டு கேட்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.

தொற்றுநோய் போல் நம் நாட்டில் புரையோடிவிட்ட ஊழல் வியாதியை முற்றிலும் ஒழிக்க முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்பட எல்லா தரப்பினரையும் ஊழல் பேய் பிடித்து ஆட்டுகிறது. இந்த மாய பிடியில் இருந்து அவர்களை மீட்டு நாட்டை காப்பாற்றவேண்டும் என்று பலர் புலம்பி வந்தனர். ஆனால் அதற்கு மீண்டும் ஒரு காந்திதான் பிறக்க வேண்டும் என்று எள்ளி நகையாடியவர்கள் உண்டு.

இதோ மீண்டும் ஒரு காந்தி வந்து விட்டார். ஊழலை ஒழிக்கும் விடிவெள்ளியாக அன்னா ஹசாரே வடிவில்... குல்லாவும் கதர் சட்டையும் அணிந்து சுத்தமான காந்தியவாதி என்ற அக்மார்க் அடையாளத்துடன் தள்ளாத வயதிலும் ஊழலை ஒழிக்க ஹசாரே தொடுத்துள்ள தர்மயுத்தம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நெஞ்சுரம் மிக்க ராணுவ வீரராக இருந்த ஹசாரே முதலில் தனது சொந்த கிராமத்தை தலைநிமிர வைத்தார். இப்போது ஊழலுக்கு எதிராக அவர் எழுப்பிய கர்ஜனை நாட்டையே அதிர வைத்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் முதல் கடை கோடி பாமரன் வரை அத்தனை பேரும் இந்த கலியுக காந்தியின் கரத்தை வலுப்படுத்த தயாராகி விட்டார்கள். ஊழலை ஒழிக்க முடியாது என்று சோர்ந்து போனவர்கள் மத்தியில் லேசான நம்பிக்கை துளிர்த்துள்ளது.

அன்னா ஹசாரே என்பது ஊழலுக்கு எதிரான இயக்கமாக நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கானவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து அகிம்சை புரட்சியை அசுர வேகத்தில் தொடங்கி விட்டார்கள்.

சென்னையில் இன்று அன்னா ஹசாரே கரத்தை வலுப்படுத்த மனித சங்கலியாக கை கோர்ப்போம் என்று அறிவித்து இருந்தனர். காலை 6 மணிக்கு மெரீனா கடற்கரைக்கு திரண்டு வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களே ஆச்சரியம் அடைந்தனர்.

ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வத்துடன் வந்தது அவர்கள் மனதில் இருந்த ஆதங்கத்தை வெளிக்காட்டியது. காந்தி சிலை முன்பு தொடங்கிய மனித சங்கிலி கண்ணகி சிலையையும் தாண்டி நீண்டு சென்றது. சுமார் 6 ஆயிரம் பேர் கை கோர்த்து நின்றனர்.

தேசிய கொடி பேட்ஜீகளை அணிந்தபடி லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அன்னா ஹசாரேவுக்கு துணை நிற்போம் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் பிடித்து இருந்தனர்.

88 வயது சுதந்திரப் போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதியும் மனித சங்கலியில் இணைந்து நின்றார். உள்ளத்தில் கொந்தளித்த ஆதங்கத்தில் உணர்ச்சி பிழம்பாய் ஊழலுக்கு எதிரான கோஷங்களை முழங்கினார்கள்.

இதில் கலந்து கொண்ட இளைஞர்களிடம் கேட்டபோது, ஊழலை ஒரேநாளில் ஒழித்து விட முடியாது. நாம் நினைத்தால் விரட்ட முடியும். ஊழல் செய்பவர்களுக்கு பயத்தை கொடுக்க முடியும். இதனால் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கி நடை போடுவோம் என்றனர்.

இளைஞர்களுக்கு நம்பிக்கை ஒளி கொடுத்த அன்னா ஹசாரே.

No comments: