இலங்கையை முற்றுகையிட அமெரிக்கா உளவு பார்த்து வருவதாக இலங்கையின் 'தேசப்பற்றுள்ள தேசிய பாதுகாப்பு இயக்கம்' தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் இலங்கை வான் பகுதிக்குள் அதிரடியாகப் பறந்தன அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 10 போர் விமானங்கள்.
அமெரிக்க கடற்படையின் 7வது பிரிவைச் சேர்ந்த இந்த விமானங்கள் பிதுருதலகலா என்ற இடத்தின் மீது பறந்தன. இதுகுறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் நிமலசிறி கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. இது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் புகார் தரப்படும் என்றார்.
ஆனால் இந்த ஊடுருவலை அமெரிக்கா உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
இந் நிலையில் இலங்கை அரசு தனது படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், யுத்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் மிகவும் தீவிரமாகவே காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை விஷயத்தில் அமெரிக்கா மிகவும் தீவிரமாகவே செயற்படுகிறது. அது மட்டுமன்றி அனுமதியின்றி ஏனைய நாடுகளில் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்துதல், சிறு நாடுகளை ஆக்கிரமித்தல் என்று பல்வேறு நடவடிக்கைகளிலும் அமெரிக்கா அண்மைக்காலமாக தீவிரமாக செயற்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியப் பயணத்தின்போதும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்திருந்தார். தற்போது ஆசிய பசிபிக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் 7வது சிறப்புக் கூட்டுப்படையின் 10 போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பில் ஊருவிச் சென்றுள்ளன. இந்த ஊருவல் முதல் தடவையாக நடந்ததாகக் கூறமுடியாது. ஏனெனில் தற்போது வெளிப்படுகின்ற தகவல்களைப் பார்த்தால் பல தடவை மிகவும் ரகசியமான முறையில் அமெரிக்க விமானங்கள் வேவுப்பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது.
எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் உஷார் நிலையில் இருக்க வேண்டும். அமெரிக்காவினால் எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இலங்கை போர் குற்றம்-விசாரி்க்க அமெரிக்கா ஆதரவு:
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில், இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை மேற்கொள்ளும் எந்த விசாரணையையும் அமெரிக்கா ஆதரிக்கும் என்றார்.
அமெரிக்காவுக்கான இந்தியா டுடே-ஹெட்லைன்ஸ் டுடே குழுமத்தின் நிருபர் தேஜிந்தர் சிங் இது தொடர்பாக டோனரிடம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment