சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி ஆகியவற்றில் முதல் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கான கல்லூரி அறிமுக கூட்டம் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் நேற்று மாலை நடந்தது.
இதில் முன்னாள் ஜனாதிபதியும், இக்கல்லூரியின் பழைய மாணவருமான அப்துல் கலாம் கலந்துகொண்டு மாணவ - மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
இந்த கல்லூரியில் 1954-57-ம் ஆண்டில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தேன். இறுதி ஆண்டு படிக்கும்போது எங்கள் பேராசிரியர் சீனிவாசன், ஏர்கிராப்ட் ஒன்றை டிசைனிங் செய்து தருமாறு ஒரு புராஜெக்டை கொடுத்தார். மிகவும் கஷ்டப்பட்டு அதை வெற்றிகரமாக வடிவமைத்தோம். அதை எங்கள் பேராசிரியர் பெரிதும் பாராட்டினார். ஆகாய உச்சிதான் நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
பறந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் அது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதை நமக்கு எப்போதும் வலியுறுத்திக் கொண்டே இருக்கும். கல்லூரியில் முதலாண்டு அடியெடுத்து வைத்துள்ள மாணவ - மாணவிகளாகிய நீங்கள் முதல் ஆண்டில் இருந்தே நன்றாக படிக்க தொடங்குங்கள். கடினமாக உழையுங்கள். விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். தோல்விகள் உங்களை தோற்கடிக்கக்கூடாது. தோல்வியை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்.
இதற்கு தேவையான சூழ்நிலையை அண்ணா பல்கலைக்கழகம் உங்களுக்கு நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்கும். கடந்த பல ஆண்டுகளாக மாணவ - மாணவிகளை சந்தித்து வருகிறேன். இந்தியா 2020-ம் ஆண்டு வளர்ந்த நாடாக உயரும் என்று என்று சொல்லி வருகிறேன். இன்னும் 9 ஆண்டுகள் உள்ளன.
2020-ம் ஆண்டு, கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைவெளி இல்லாத இந்தியாவாக, நதிநீர் இணைப்பு பெற்ற இந்தியாவாக, சமூக பாகுபாடு காரணமாக எந்த மாணவருக்கும் கல்வி மறுக்கப்படாத இந்தியாவாக, வறுமை இல்லாத இந்தியாவாக, நேர்மையான தலைவர்கள் உள்ள நாடு என்று ஒவ்வொருவரும் போற்றக்கூடிய இந்தியாவாக இருக்கும். விவசாயம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதி ஆகிய அனைத்து வசதிகளும் நம் நாட்டில் மேம்பட்டு இருக்கும். வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை உருவாக்கி கொள்ளுங்கள். அதை நோக்கி விடாமுயற்சியோடு வேர்வை சிந்தி மேலும் மேலும் கடினமாக உழையுங்கள்.
வெற்றி அடைவீர்கள். இவ்வாறு அப்துல் கலாம் கூறினார். ? இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதில் அளித்தார். அப்போது ஹரிபிரியா என்ற மாணவி, ``நம் நாட்டில் ஊழலை ஒழிக்க முடியுமா?'' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கலாம், ஊழல் ஒழிப்பு பணியை முதலில் வீட்டில் இருந்து தொடங்குங்கள். ஊழல் செய்யாதீர்கள் என்று உங்கள் தந்தையிடம் கூறுங்கள். ஆனால், எத்தனை பேர் அவ்வாறு தந்தையிடம் போய் தைரியமாக சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.
இப்போதைய இளைஞர்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றவே விரும்புகிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒரு மாணவர் கேள்வி கேட்டார். அதற்கு அப்துல் கலாம், திரைகடலோடியும் திரவியம் தேடு என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால், அங்கு அறிவை வளர்த்துக்கொண்டு அந்த அறிவை நம் நாட்டு முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
No comments:
Post a Comment