Wednesday, May 11, 2011

வரலாறு காணாத நிதி நெருக்கடியில் நியூஸிலாந்து !!


ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக நிதி நெருக்கடி, கடன் என சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. முதல் முறையாக இந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடான நியூஸிலாந்து.

அந்நாட்டின் வரலாற்றில் இதுவரை பார்த்தறியாத கடன் சுமையும் நிதி நெருக்கடியும் வாட்டத் தொடங்கியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டை உலுக்கியெடுத்த பெரும் பூகம்பம். க்ரைஸ்ட்சர்ச் உள்ளிட்ட நகரங்களை பாதித்த இந்த பூகம்பத்தால், நியூஸிலாந்தின் பொருளாதாரமே சீர்குலைந்து போனது.

இதனால் கடன் மேல் கடன் வாங்கிக் குவிக்க, இப்போது அந்த கடனே நியூஸிலாந்தை மூழ்கடித்துவிடும் அபாயம். இந்த நெருக்கடியை முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நியூஸிலாந்து.

அந்நாட்டின் நிதியமைச்சர் பில் இங்லீஷ் இதுபற்றிக் கூறுகையில், "பூகம்பம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்பை விட அதிக பாதிப்பு நியூஸிலாந்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த 12 மாதங்களுக்கான நிதிப் பற்றாக்குறை அளவு 17 பில்லியன் நியூஸிலாந்து டாலர்கள் (13.5 அமெரிக்க டாலர்கள்). இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

4.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூஸிலாந்து, வாரம் 300 மில்லியன் டால் அளவுக்கு ஐஎம்எப்பிலிருந்து கடன் பெறுகிறது. இதனால் அதன் நிதிச் சுமை எக்கச்சக்கமாகியுள்ளது.

"கடன்களை தன் நாட்டு வளங்களிலிருந்தே பெறும் அளவுக்கு ஒரு நாடு இருக்க வேண்டும். கடனுக்கு பிற நாடுகளைச் சார்ந்திருக்கும்போது, நிதிச் சுமை கழுத்தை நெறிக்க ஆரம்பித்துவிடும். எனவே நியூஸிலாந்து இனி உள்நாட்டு சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும்," என்றார் பில் இங்லீஷ.

No comments: