Wednesday, May 11, 2011

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே ! - நியூஸி. உச்ச நீதிமன்றம் அதிரடி !


இறைமை உள்ள ஒரு இனத்துக்காகப் போராடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு அரசியல் அமைப்பே. அதன் உறுப்பினர்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது என நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1992-ல் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படை இடைமறித்து சென்னை நோக்கி செலுத்தி வந்தது. இதில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு இருந்தார்.

சென்னைக்கு அருகில் இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதும் கப்பல், அதிலிருந்த ஆயுதங்கள் மற்றும் புலிகள் அமைப்பின் தலைவர்களை சிறைப்படுத்த இந்திய கப்பல் படையினர் முயன்றபோது, கப்பலை வெடி வைத்துத் தகர்த்தனர் புலிகள். இதில் கிட்டு உள்ளிட்டோர் இறந்தனர். மூவர் மட்டும் கடலில் குதித்துத் தப்பினர்.

அவர்களை இந்தியா கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2001-ல் தண்டனை முடிந்ததும், அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியது இந்தியா. பின்னர் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்றனர். 2002-ல் அகதி உரிமை கோரி அங்கு விண்ணப்பித்தனர்.

ஆனால் இதனை நிராகரித்த நியூஸிலாந்து அரசு அவர்களில் இருவரை நாடு கடத்தியது. மூன்றாமவர் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நியூஸிலாந்து நீதிமன்றம் மேற்கண்ட முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், தனது செயலை அதை ஒப்புக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு இந்திய அரசு வழங்கிய தண்டனை மற்றும் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அகதி உரிமையை மறுத்தது நியூஸிலாந்து அரசு.

இதனை விசாரித்த நீதிபதி, இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை படைத்தவர்களே என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் இந்த விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டார்.

குறிப்பிட்ட அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்றது உண்மையாகவே இருந்தாலும், புலிகள் தங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு அத்தியாவசியமான பொருள்களைத்தானே அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது? இதில் தவறு காண வேண்டியதில்லை. அந்தக் கப்பல் புலிகளுக்குப் போய்ச் சோராத நிலையில் அவர்களாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியல் குற்றமோ, பொதுமக்களுக்கு ஊறு விளைவித்த குற்றமோ இல்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அரசியல் அமைப்பு :

மேலும் தமது தீர்ப்பில், "இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினர். புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கி வருகிறது" என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக ஆஸ்திரேலியா பட்டியலிட்டபோது, நியூசிலாந்தும் அதற்கான முயற்சியில் இறங்கியது.

அப்போது நியூசிலாந்து தமிழர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இன்று புலிகளுக்கு தடை விதிக்காத முக்கிய நாடுகளுள் நியூஸிலாந்தும் ஒன்று.

உலகில் தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் புலிகள் மீது தடைகள் உள்ளன. உலகத் தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது.

தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்கிட முயற்சிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கருதுகின்றன.

இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தவறானது என்பதை கிட்டத்தட்ட வெளிப்படையாகவே உரைத்திருக்கிறது நியூஸிலாந்து உச்ச நீதிமன்றம். எனவே இதை மேற்கோள் காட்டி, புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து இந்தியாவிலும் வாதாட தமிழ் அமைப்புகள் முயலலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும் புலிகள் தங்கள் ஆயுதக் கப்பலை மூழ்கடித்தது, அரசியல் குற்றமோ, பொது நலனுக்கு எதிரான குற்றமோ அல்ல என தெள்ளத் தெளிவாக நியூஸிலாந்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் வல்வெட்டித் துறைக்கு கொண்டு சென்ற கப்பலை இடைமறித்தது இந்திய கப்பல் படைதான். தங்களுக்குச் சொந்தமான பொருளை புலிகள் மூழ்கடித்ததில் என்ன குற்றம் காண முடியும்? அந்த ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை அவர்கள் தாக்க முயலவில்லையே என்றும் நீதிபதிகள் கருத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

No comments: