Wednesday, May 11, 2011

பாதுகாப்பு பணியில் 4500 ராணுவ வீரர்கள் : ஓட்டு எண்ணிக்கை வீடியோவில் பதிவு ; தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி.

பாதுகாப்பு பணியில் 4500 ராணுவ வீரர்கள்:    ஓட்டு எண்ணிக்கை    வீடியோவில் பதிவு;    தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக தேர்தல் பணி நடந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளோம். 234 தொகுதிகளுக்கும் தனித்தனி அறையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 91 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. ஒருசில அறைகளில் 4, 5 தொகுதி அறை அடிப்படையில் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. சென்னை லயோலா கல்லூரியில் 7 தொகுதிகளுக்கும், ராணிமேரி கல்லூரியில் 4 தொகுதிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஓட்டு எண்ணும் பணியில் 16,966 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவம் ஈடுபடுத்தப்படுகிறது. ஒரு கம்பெனிக்கு 100 பேர் வீதம் 4,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே 27 கம்பெனி துணை ராணுவம் வந்து விட்டது. மேலும் 18 கம்பெனி துணை ராணுவம் வருகிறது. இன்று மதியம் முதல் துணை ராணுவத்தினர் வருகிறார்கள். இதில் 9 கம்பெனி சென்னை நகருக்கும், 5 கம்பெனி திருச் சிக்கும், 4 கம்பெனி மதுரைக்கும் அனுப்பப்படுகிறது. ஓட்டு எண்ணப்படும் ஒவ்வொரு மையத்துக்கும் 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 3 அதிகாரிகள், 9 போலீஸ்காரர்கள் இதில் அடங்குவார்கள்.

ஓட்டு எண்ணும் மையத்துக்கு 100 மீட்டருக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வாகனத்தில் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டை இல்லாமல் யார் வந்தாலும் அனுமதி இல்லை. ஓட்டு எண்ணும் மையத்துக்குள் மை பேனா, தண்ணீர் பாட்டில், சிகரெட், பீடி, தீப்பெட்டி போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்போனையும் எடுத்துச் செல்லக் கூடாது. பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே வளாகத்துக்குள் செல்போன் கொண்டு செல்லலாம். இவர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. ஓட்டு எண்ணப்படும் வளாகத்தில் இஷ்டத்துக்கு ஆங்காங்கே நின்று கொண்டு செல்போன் பேசக்கூடாது. வேட்பாளர், ஏஜெண்டுகளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் செல்போனில் பேசலாம்.

தேர்தல் பார்வையாளர் ஒருவருக்கு மட்டுமே ஓட்டு எண்ணும் அறையில் செல்போன் வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது. பத்திரிகையாளர்களுக்கு தனி அறை ஒதுக்கப்படுகிறது. அங்கு இண்டர் நெட், டெலிபோன், பேக்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு 8 முதல் 14 டேபிள்கள் ஒதுக்கப்படுகிறது. ஓட்டுக்கள் அதிகமாக இருந்தால் 16 டேபிள்கள் போடப்படும். ஒவ்வொரு சுற்றும் முடிந்து கையெழுத்து வாங்கிய பிறகுதான் அந்த சுற்றின் முடிவு அறிவிக்கப்படும். அதாவது முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான் 2-வது சுற்று எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். 8 மணி முதல் 8.30 மணி வரை தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிகாலை 5 மணிக்கே வரவேண்டும். தேர்தல் பார்வையாளருக்கு தனி அறை எதுவும் கிடையாது. அவர் ஓட்டு எண்ண தொடங்கியது முதல் முடியும் வரை அங்கேயே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடிவுகள் திரை மூலமாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும், கரும்பலகை மூலமாகவும் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்று முடிவும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அதன் நகல் வேட்பாளருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படும். கடைசி 2 சுற்று முடிவு அறிவிப்பதற்கு முன்னதாக தபால் ஓட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ஓட்டு எண்ணும் பணி முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மேஜை வாரியாக கண்காணிக்கப்படும். இதில் யார் தவறு செய்திருந்தாலும் தெரிந்து விடும். ஓட்டு எண்ணும் இடத்தில் 4 கட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணப்படும் அறை, அதற்கு முன்புள்ள பகுதி, வளாகம் மற்றும் வளாகத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மத்திய தேர்தல் கமிஷனுக்கு ஓட்டு எண்ணிக்கையின்போது டேட்டா என்ட்ரி செய்வதில் முறைகேடு வாய்ப்பு உள்ளதாக புகார் அளித்திருக்கிறாரே?

பதில்:- இந்த முறை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. எந்தவித தவறோ முறைகேடோ நடைபெறாது. தேர்தல் அதிகாரி அருகிலேயே டேட்டா என்ட்ரி அலுவலர் மூலமாகவும், கம்ப்யூட்டர் மூலமாகவும் நடைபெறும். இதை தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி பார்வையிடுவார்கள். இதை வேட்பாளரும் பார்க்கலாம். இதில் தவறு நடைபெறாது.

கேள்வி:- இந்த தேர்தல் அனுபவம் எப்படி இருக்கிறது?

பதில்:- எனக்கு கொடுக்கப்பட்ட பணியை நான் செய்கிறேன். மீடியாக்கள், அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் ஆகியோர் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் செயல் பட்டேன். இந்த பணி திருப்தியாக உள்ளது.

கேள்வி:- தமிழக முதல்- அமைச்சர் நீங்கள் பாரபட்சமாக செயல்பட்டதாக குற்றச் சாட்டு கூறுகிறாரே?

பதில்:- தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் உள்பட்டுத்தான் நான் செயல்பட்டேன். அரசியல் கட்சிகளிடையே பாகுபாடு பார்த்து நான் செயல்படவில்லை.

கேள்வி:- தேர்தல் முடிவு எப்போதிருந்து தெரிய வரும்.

பதில்:- நான் ஜோதிடர் அல்ல.

கேள்வி:- தேர்தல் விதி முறையை மீறியதாக எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- 6,818 பெரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5,935 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4,557 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 389 வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். 386 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திரன், அமுதா உடன் இருந்தனர்.

No comments: