Thursday, June 16, 2011

ஒரே வாரத்தில் 20 நகை பறிப்பு சம்பவம் : போலீசுக்கு சவால்விடும் கொள்ளையர் .


கோவை மாநகர போலீசுக்கு சவாலான நேரம் தொடங்கி உள்ளது!

இதுவரை இல்லாத அளவுக்கு நகரில் பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சாய்பாபா காலனி, குனியமுத்தூர், உக்கடம் என்று பாரபட்சமில்லாமல் எல்லா பகுதிகளிலும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிக்கும் சம்பவம் சங்கிலி தொடர் போல் நடந்து வருகிறது.

நேற்று இரவு 8.50 மணிக்கு ஆர்.எஸ்.புரத்தில் ஜனநெருக்கடி மிகுந்த டி.பி. ரோட்டில் 20-வது நகை பறிப்பு சம்பவத்தை மோட்டார் சைக்கிளில் வலம் வரும் ஹெல்மெட் கொள்ளையர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளனர். இது மாநகர போலீசாருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி என்றே கருதப்படுகிறது.

கோவையில் 20-வது நகை பறிப்பு சம்பவத்தில் நகையை பறி கொடுத்தவர் டாடாபாத்தை சேர்ந்த தேவகி (வயது 72). இவர் தனது பேத்தியுடன் ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஆடைகள் எடுக்க வந்திருந்தார். பேத்தி கடைக்கு சென்றதும் தேவகி மட்டும் கடைக்கு வெளியே நின்றிருந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் தேவகியின் கழுத்தில் கிடந்த 3 தங்க சங்கிலியை கொத்தாக பறித்தனர். இதில் ஒரு சங்கிலி கீழே விழுந்தது. 2 சங்கிலி கொள்ளையர்களின் கையில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று தப்பி விட்டனர்.

கொள்ளையர்களை அந்த பகுதிக்கு வந்த இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சத்தியநாராயணன் என்பவர் விரட்டினார். ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் உதவி போலீஸ் கமிஷனர் முருகசாமி, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

அங்கு ரோந்து பணியில் இருந்த வயதான சப்-இன்ஸ்பெக்டரை அழைத்து உதவி கமிஷனர் கடுமையாக திட்டினாரே தவிர தப்பி சென்ற கொள்ளையரை பிடிக்க எந்த உஷார் நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

ஒருவரை ஒருவர் குறை செல்வதை விடுத்து கொள்ளையனை கோட்டை விட்ட போலீசாருக்கு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் அட்வைஸ் இதோ...

ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் இருந்து தப்பிச் சென்ற கொள்ளையர்கள் புற நகருக்கு செல்ல மருதமலை சாலை, அல்லது தடாகம் சாலை பகுதியை தேர்ந்தெடுத் திருந்தால் கண்டிப்பாக லாலி ரோடு சிக்னல் வழியாகத்தான் கடந்து சென்றிருப்பார் கள். அங்கு நான்கு புறமும் காமிரா உள்ளது. கண்டிப்பாக கொள்ளை நடந்த சில நிமிடங்களில் சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிளை வீடியோ மூலம் ஆய்வு செய்தால் கொள்ளையன் சிக்கி கொள்வான். முயன்றால் முடியாதது இல்லை! தமிழ்நாடு போலீசால் முடியாதது என்பது எதுவுமே இல்லை! ஒன்று பட்டு செயல்பட்டால் கோவையில் குற்றங்கள் குறையும் என்றனர்.

No comments: