Thursday, June 16, 2011

நீரா ராடியாவுக்கு கொலை மிரட்டல் : வக்கீல் மீது சி.பி.ஐ.யிடம் புகார்.

ஸ்பெக்ட்ரம் சாட்சி நீராராடியாவுக்கு கொலை மிரட்டல்:    வக்கீல் மீது சி.பி.ஐ.யிடம் புகார்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தயாரித்துள்ள சாட்சிகள் பட்டியலில் 125 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 44-வது சாட்சியாக சேர்க்கப்பட்டிருப்பவர் நீராராடியா. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெட்ட வெளிச்சமானதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நீராராடியா தான் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரபல கார்ப்பரேட் இடைத் தரகரான இவர், முக்கியப் புள்ளிகளுடன் போனில் பேசியதை வருமான வரித்துறை பதிவு செய்ததால் ஸ்பெக்ட்ரம் முறைகேடு உறுதிபடுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விசாரணைகள் நடந்த பிறகே ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதம் கிளம்பியது.

நீரா ராடியா அரசு தரப்பு சாட்சியாக மாறியதைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரமில் பயன் அடைந்த தனியார், நிறுவனங்கள், பண பரிமாற்றங்களும் தெரிய வந்தது. ஏற்கனவே 2 தடவை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளது. இதில் ஒரு நிறுவனம் பற்றியும், மேலும் சிலரது பெயர்களும் இடம் பெறும் என்று தெரிய வந்துள்ளது.

அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிப்பதில் நீராராடியா முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறப்படுகிறது. இதை அறிந்ததும் டெல்லியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், கடந்த சில தினங்களாக நீரா ராடியாவை போனில் பேசி மிரட்டினார். கொலை மிரட்டலும் விடுத்தார். கடிதம் ஒன்று மூலமாகவும் நீராராடியாவுக்கு, அந்த வக்கீல் கொலை மிரட்டல் விடுத்தார்.

உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததால், நீராராடியா நேற்று சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங்கை சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தனக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தை சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி. சிங்கிடம், நீராராடியா கொடுத்தார். டெல்லி போலீசாரிடம் புகார் செய்யாமல், சி.பி.ஐ. யிடம் கொலை மிரட்டல் குறித்து கூறுவது ஏன் என்பதற்கான காரணத்தை நீராராடியா கைப்பட எழுதி கொடுத்தார்.

கொலை மிரட்டல் விடுத்த வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீராராடியா கேட்டுக் கொண்டார். இதை சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். டெல்லியை சேர்ந்த அந்த வக்கீல் யார்? எந்த நிறுவனத்துக்காக அந்த வக்கீல் கொலை மிரட்டல் விடுத்தார்? என்பன போன்ற தகவல்களை வெளியிட சி.பி.ஐ. மறுத்துவிட்டது.

No comments: