Monday, May 16, 2011

50 கோடி ரூபாய் செலவில் பழைய தலைமைச் செயலகம் புதுப்பிக்கும் பணி.





2011 பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. 3வது முறையாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல் அமைச்சராக திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார். இந்த நிலையில், பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை அமைக்கப்படுகிறது. அதற்காக சட்டப்பேரவை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.



தி.மு.க. ஆட்சியில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 2010ம் ஆண்டு மார்ச் 13ந் தேதி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புதிய தலைமை செயலகம் திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து பழைய தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம், பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை 40 ஆயிரம் புத்தகங்களுடன் தொடங்கியது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில், எண்ணற்ற தமிழ் நூல்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தகட்டில் (சி.டி.) பதிவு செய்யப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத் தொகை போன்ற செவ்விலக்கியங்களும் உள்ளன.

இந்த இடத்தில், மீண்டும் சட்டப்பேரவை அரங்கம் அமைக்கப்பட இருப்பதால், நூலகத்தை காலி செய்யும்படி அதன் ஒருங்கிணைப்பாளர் சிவமணியிடம் அதிகாரிகள் கூறினார்கள். அவர் உடனே அதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவரும் காலி செய்வதற்கான ஏற்பாட்டை செய்யும்படி உத்தரவிட்டார். இதற்கிடையே, இந்த நூலகத்தை வேறு எங்கு கொண்டு செல்வது என்பது பற்றி தலைமை செயலர் எஸ்.மாலதி மற்றும் உயர் அதிகாரிகள் சென்னை கோட்டையில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நூலகம் அமைக்கும்போது, சட்டப்பேரவையில் இருந்து அகற்றப்பட்ட இருக்கைகள் மீண்டும் பொருத்தி பேரவை புதுப் பொலிவுடன் அமைக்கப்படுகிறது.

இதற்கிடையே, பழைய தலைமை செயலகத்தை சுத்தம் செய்து, வெள்ளையடிக்கும் பணி இரவு, பகலாக மின்னல் வேகத்தில் நடக்கிறது. முதல் அமைச்சர் அறையும், அமைச்சர்களின் அறைகளிலும் உள்ள திரைச்சீலைகள், இருக்கைகள், தரைவிரிப்புகள் மாற்றப்படுகின்றன. ஜெயலலிதாவை வரவேற்று சிறியதும், பெரியதுமாக தலைமை செயலகத்தில் ஆங்காங்கே கட் அவுட்டுகள் கட்டியிருக்கிறார்கள். அந்த கட் அவுட்டுகளில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று முதல் அமைச்சர் பொறுப்பேற்க வரும் முதல்வரே, வருக வருக என்ற வாசகங்கள் பளிச்சிடுகின்றன. பழைய தலைமைச் செயலகம் புதுப் பொலிவுப் பெற சுமார் 50 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பழைய தலைமை செயலகத்தில் சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதால், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா திங்கள்கிழமை பகல் 12.15 மணிக்கு நடைபெறும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

No comments: