Monday, May 16, 2011

அடுத்த வாரம் டீஸல், எரிவாயு, கெரசின் விலை கடும் உயர்வு?


டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அடுத்த வாரம் உயரும் என்று தெரிகிறது.

எவ்வளவு விலை உயர்த்துவது என்பதை முடிவு செய்ய அடுத்த வாரம் மத்திய அமைச்சர்கள் குழு கூடுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, அதிக அளவில் மானியம் அளிக்க முடியாமல் கடந்த ஆண்டில் இருந்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதித்தது. அதன் பிறகு கடந்த 11 மாதங்களில் 11 முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

கடைசியாக நேற்று முன்தினம் லிட்டருக்கு ரூ.5.29 உயர்ந்தது. சென்னையில் லிட்டருக்கு ரூ.67.22 விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது.

மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, டீசல் போன்றவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்ந்ததால் டீசல் விலையும் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்காளத்தில் புதிதாக வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்க கொல்கத்தாவுக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்றார். பிரணாப்பிடம் டீசல் விலை உயர்வு குறித்து கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசு விடுவித்துக்கொண்டது. எனவே, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. எனினும் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற மற்ற பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்கிறது.

கடைசியாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 68 டாலராக இருந்தது. தற்போது, பீப்பாய்க்கு 110 டாலராக உயர்ந்து விட்டது. அடுத்த வாரம் நடைபெற உள்ள மத்திய மந்திகள் குழு கூட்டத்தில் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்துவது தொடர்பான முடிவு எடுக்கப்படும்," என்றார்.

எரிவாயு ரூ.25 வரை உயருகிறது

டீசல், சமையல் கியாஸ் விலை எவ்வளவு உயர்த்தப்படும் என்றும், விலை உயர்வு குறித்து முடிவு எடுக்கும் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவிக்கவில்லை.

ஆனால், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.25 வரையும் உயர்த்துமாறு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கும் சமையல் எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது, மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ.26-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.16-ம் சமையல் கியாசுக்கு சிலிண்டருக்கு ரூ.320-ம் மானியமாக வழங்கப்படுகிறது.

No comments: