Monday, May 16, 2011

பெட்ரோல் விலை அதிகரிப்பு : ஆட்டோ கட்டணம் உயர்வு.

பெட்ரோல் விலை அதிகரிப்பு: ஆட்டோ கட்டணம் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29 பைசா நேற்று முன்தினம் இரவு முதல் உயர்த்தப்பட்டது. இதையொட்டி லாரி வாடகை, ஆட்டோ கட்டணம், கால் டாக்சி போன்றவற்றின் கட்டணம் உடனடியாக உயர்ந்தது.

ஆட்டோ டிரைவர்கள் ரூ.20, ரூ.30 என கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள். சென்னையில் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது குறித்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தியாகராய நகர் வைத்தியநாதன் தெருவில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டிற்கு செல்ல இதுவரை ரூ.80 கட்டணம் கொடுத்து வந்ததாக பயணி ஒருவர் கூறினார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டவுடன் தற்போது ரூ.100 வசூலிப்பதாக அவர் தெரிவித்தார்.

சூளைமேட்டை சேர்ந்த சைனி என்பவர் தான் பணிபுரியும் சேத்துப்பட்டிற்கு தினமும் ஆட்டோவில் செல்வாராம். 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பயணத்திற்கு ரூ.50-60 கட்டணம் வசூலிக்கிறார்கள். சில நேரம் ரூ.70 கூட கேட்கிறார்கள். நான் பல நகரங்களில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளேன். ஆனால் சென்னையில்தான் ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக உள்ளது. மீட்டர் பயன்படுத்தாமல் அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இங்குதான் உள்ளது என்று அவர் கூறினார்.

கெல்லீஸ் ஜங்சனில் இருந்து ஸ்டெல்லாமேரி கல்லூரிக்கு செல்ல தற்போது கூடுதலாக ரூ.30 ஆட்டோ கட்டணம் வசூலிப்பதாக ஜெயா என்ற பெண் கூறினார்.

இதே போல சென்னையில் இயக்கப்படும் கால்டாக்சிகளும் கட்டணத்தை உயர்த்தி விட்டன. செய்கொடி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க பொதுச் செயலாளர் தமிழ்ச் செல்வம் கூறியதாவது:-

கடந்த 9 மாதத்தில் 10 முறை பெட்ரோல் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்த தொழிலை விட்டு விட வேண்டியதுதான். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், டிரைவர்களுக்கும் தகராறு ஏற்படுவதோடு மனக் கஷ்டமும் உண்டாகிறது. அடிக்கடி பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ தொழில் நலிவடைந்து வருகிறது. கட்டணத்தை உயர்த்தக்கூடிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இதுபற்றி பேச அனைத்து தொழிற்சங்கம் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதில் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்ய உள்ளோம். ஒரு சிலர் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் பொதுமக்களிடம் அதிருப்தி உண்டாகிறது.

கியாஸ் மூலம் ஆட்டோ ஓட்டினால் “மைலேஜ்” கிடைப்பது இல்லை. அதனால் பெட்ரோலை முழுமையாக நம்ப வேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: