Saturday, October 8, 2011

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றம்.



சென்னை : எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களின் தேர்வு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆனாடமி, பயோகெமிஸ்ட்ரி, பிசியாலஜி என மூன்று பாடங்கள் உள்ளன.

இந்த மூன்று பாடத்திலும் இரண்டிரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 100 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி அடைந்ததாக கருதப்படுவார்கள்.

இந்த முறையை முற்றிலுமாக மாற்றி, புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஒரு பிரிவில் 44ம், ஒரு பிரிவில் 90ம் எடுத்தால் கூட அந்த மாணவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதிய பல மாணவர்கள் இந்த புதிய முறையால் தோல்வி அடைந்ததாக பதிவு செய்யப்பட்டு இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை.

பழைய தேர்வு முறையையே பின்பற்ற வேண்டும் என்றும், புதிய விதிமுறையை ரத்து செய்து எங்களை இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ கவுன்சில் 14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி
தினமலர், 8-10-2011

No comments: