Saturday, October 8, 2011

சென்னை பெண் அதிகாரியை, பெங்களூரில் “லிப்டுக்குள்” படுகொலை செய்த காவலாளி.



பெங்களூர் குமார கிருபா மேற்கு பகுதியில் போலோ கார்டன் எனும் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு 3-வது மாடியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிருஷ்ணன் வசித்து வருகிறார். இவரது மனைவி எஸ். அனுசுயா (43). சென்னையைச் சேர்ந்த இவர், பெங்களூரில் சர்பைன்டைன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அதிதீ (12), ஆர்த்தி (6) என்று 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று கிருஷ்ணன் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு மைசூருக்கு சென்றிருந்தார். வீட்டில் அனுசுயா மட்டும் தனியாக இருந்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் அனுசுயா வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். கீழ் தளத்தில் இருந்து 3-வது மாடிக்கு செல்ல அவர் லிப்டில் ஏறினார். கூடவே அந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அஸ்ரப் அகமது (22)வும் ஏறினான். லிப்ட் 2-வது மாடியை நெருங்கியபோது நடுவழியில் நின்றது. திடீரென லிப்டுக்குள் இருந்து அனுசுயா அலறும் சத்தம் கேட்டது.

பிறகு லிப்ட் 2-வது மாடியில் நின்றது. அனுசுயா அலறல் கேட்டு அருகில் வீடுகளில் இருந்தவர்கள் வெளியில் ஓடிவந்தனர். லிப்டில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட கத்தியுடன் வந்த அஸ்ரப்பை கண்டதும் எல்லோரும் பயந்து ஓடி வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர்.

லிப்டுக்குள் அனுசுயா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தப்படி கிடந்தார். குடியிருப்புவாசிகள் பயந்து ஓடியதால், அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அஸ்ரப், நிதானமாக கீழ் தளத்துக்கு வந்தான். ரத்தக்கறை படிந்த தனது உடையை மாற்றி வேறு சட்டை அணிந்தான். பிறகு 10 நிமிடம் கழித்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டான். அதன் பிறகு வெளியில் வந்த குடியிருப்புவாசிகள் சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

போலீசார் வந்தபோது அனுசுயா லிப்டுக்குள் பிணமாகி கிடந்தார். அவரது கழுத்தை அறுக்க பயன்படுத்தப்பட்ட கத்தி லிப்ட் அருகில் வீசப்பட்டு கிடந்தது.

லிப்டுக்குள் இருந்த கண்ணாடியில் கொலையாளி அஸ்ரப் கை தடயங்கள் பதிவாகி இருந்தன. தடயவியல் நிபுணர்கள் அவற்றை பதிவு செய்தனர். அனுசுயாவை அஸ்ரப், எதற்காக கொலை செய்தான் என்பது தெரியவில்லை. செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் அஸ்ரப் அகமது அந்த குடியிருப்புக்கு சில மாதங்களுக்கு முன்புதான் காவலாளியாக வேலைக்கு சேர்ந்திருந்தான்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அவன் அனைவரிடமும் நம்பிக்கையுடையவனாகவும், கடின உழைப்பாளியாகவும் இருந்ததால் அவனுக்காகவே கீழ் தளத்தில் தனி அறை ஒன்றை குடியிருப்பு சங்கத்தினர் கட்டி கொடுத்திருந்தனர். திடீரென அவன் பெண் அதிகாரியை கழுத்தை அறுத்து கொலை செய்தது, அந்த குடியிருப்பு பெண்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 comment:

Rathnavel Natarajan said...

என்ன கொடுமையாக இருக்கிறது?