Sunday, April 17, 2011

குற்றம்சாட்டப்பட்ட நீதிபதிகளை பாதுகாக்கக் கூடாது.



ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா வலியுறுத்தினார்.

தில்லியில் சனிக்கிழமை நடந்த 5-வது எம்.சி.சீதல்வாட் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

மிகவும் அவசியமான காரணங்கள் இருந்தாலன்றி, வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்துத் கொள்வதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும்.

கீழ்நீதிமன்றத்தின் நிர்வாக விவகாரங்களில் உயர்நிலையில் உள்ள நீதிபதிகள் தலையிடக்கூடாது. இப்படித் தலையிடும் உயர்நிலை நீதிபதிகளுக்கு சாதகமான நிலை ஏற்படாவிட்டால், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படவோ, அவர்களது பதவி உயர்வு மறுக்கப்படவோ வாய்ப்பு ஏற்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும். அதுபோல ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகளுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது.

எந்த வகையான ஆதரவையும் முன்னுரிமை தரப்படுவதையும் நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஓய்வுக்கு முன்பே வேறு பணிகளை ஒப்புக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவைதான் ஊழலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன பாரபட்சமற்ற, அச்சமில்லாத, சுதந்திரமான நீதி வழங்கும் அமைப்பின் அங்கமாக நீதிபதிகள் இருக்க வேண்டும். நீதி வழங்கும் பொறுப்பில் உள்ளவர்கள், சமூகத்தில் பிற பிரிவினருடன் கலந்து பழகுவதால், அவர்களது பணியில் பிறர் செல்வாக்குச் செலுத்த முடிகிறது என சந்தேகிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.

இப்படி சமூக ரீதியாகக் கலப்பதை நான் தவிர்த்துவிடுகிறேன். வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருடன் பழக வேண்டியிருக்கும் என்பதால் கோல்ஃப் கிளப்புகளில் கூட நான் உறுப்பினராகச் சேரவில்லை.

நீதிபதிகள் மற்றும் தீர்ப்புகள் மீது ஊடகங்களும் மக்களும் முன்வைக்கும் விமர்சனங்கள் இப்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மற்ற பொது நிறுவனங்களைப் போலவே ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நீதித்துறையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் பொறுப்பற்ற விமர்சனங்கள் கவலையளிக்கின்றன என்றார் தலைமை நீதிபதி.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வேறு சிலர், ஊழல் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் நீதிபதிகள் பி.டி.தினகரன், செமித்ர சென் ஆகியோரைக் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாவது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் அனில் திவான், பி.பி.ராவ் ஆகியோர் கவலை தெரிவித்தனர்.

No comments: