Sunday, April 17, 2011

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கும் வழிமுறைகள்..


தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்க இருப்பதால், பொதுமக்கள் திருத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்குவர். அதிலும் திருமலை திருப்பதி கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

அவ்வாறு திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ள வழிமுறைகளை பற்றிய விவரம்:

திருமலையில் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், சுதர்ஸன தரிசனம் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனம் ஆகிய தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன. இது தவிர கட்டண சேவை முறையும் உண்டு.

திவ்ய தரிசனம்: இது திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனமாகும். இதில் திருப்பதியிலிருந்து அலிபிரி வழியாகவும், சீனிவாச மங்காபுரத்திலுள்ள ஸ்ரீ வாரி படிக்கட்டுகள் என இரண்டு வழியாகவும் செல்லலாம்.

அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் நடைபாதையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டிற்கு செல்வதற்கான சீட்டு வழங்கப்படும். அதனை எடுத்துச்சென்று திருமலையில் நடந்து வரும் பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழிபடலாம்.

இலவச தரிசனம்: திருமலையில் கட்டணம் ஏதும் இல்லாமல் பக்தர்கள் வைகுண்டம் 1 வழியாக இலவசமாக தரிசிக்கும் முறையாகும். இதில் பக்தர்கள் உள்ளே சென்ற உடன் அவர்களுக்கு அனுமதி அட்டை (அக்சஸ் கார்டு) வழங்கப்படும். இதில் தரிசன நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. இந்த அட்டையை கொண்டு பக்தர்கள் காத்திருக்காமல் அதில் குறித்த நேரத்திற்கு வந்தால் போதுமானது.

சுதர்ஸன தரிசனம்: இந்த தரிசனம் ரூ. 50 செலுத்திச் செல்லும் தரிசனமாகும். இது திருப்பதி மற்றும் எல்லா நகரங்களிலுள்ள திருமலை திருப்பதி தகவல் மையங்களிலும் விவரங்களை அளித்து பெற்றுக்கொள்ளலாம்.

இதில் தரிசனத்திற்குச் செல்வதற்கான நேரம் குறிக்கப்பட்டிருப்பதால், அந்த நேரத்தில் சென்று வழிபடலாம்.

சிறப்பு நுழைவு தரிசனம்: இது ரூ. 300 செலுத்தி எந்த வித முன் பதிவுமின்றி வழிபாட்டிற்குச் செல்லும் முறையாகும். இம்முறையில் நேரடியாக திருமலையில் வந்து வரிசையில் நின்று டிக்கட் பெற்றுக்கொள்ளலாம்.

இது தவிர மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கோயிலின் எதிரே உள்ள வரிசையில் காத்திருந்தால், கோயில் ஊழியர்களால் மகா துவாரம் வழியாக வழிபாட்டிற்காக அழைத்துச் செல்லப்படுவர். இந்த முறை நாளொன்றுக்கு 4 முறை அனுமதிக்கப்படும். மேலும் 1 வருட கைக் குழந்தையை எடுத்து வரும் பெற்றோர் கோயிலின் அருகே உள்ள சுபதம் நுழைவாயில் வரிசையில் அனுமதிக்கப்படுவர்.

இது தவிர சில கட்டண சேவைகள் உள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் திருமலையில் உள்ள விஜயா வங்கியில் சென்று கைரேகை மற்றும் அடையாள அட்டையைக் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம். இது குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படும்.

மேற்கண்ட வழி முறைகளை பின் பற்றி திருமலையில் ஏழுமலையானை பக்தர்கள் வழிபடலாம். இதில் எந்த முறையில் சென்று வழிபட்டாலும் அவர்களுக்கு புகழ்பெற்ற பிரசாதமான இரண்டு லட்டுகள் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும்


No comments: