Sunday, April 17, 2011

தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?


இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவானது ஏன்? என்பதற்கு முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும், இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இது, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 5 சதவீதம் அதிகம். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவைவிட 7 சதவீதம் கூடுதல் ஆகும்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் அதிகளவு வாக்குகள் பதிவாகின. அதைப்போல இல்லாமல், இந்த தேர்தலில் வாக்காளர்களின் ஆர்வம் மற்றும் உயர் நடுத்தர மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டதே அதிக வாக்குப்பதிவிற்கு காரணம் என்று தெரிகிறது.

கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிதாக பெயர் சேர்க்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம். கடந்த தேர்தல்களைவிட இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது குறைவுதான்.

உள்ளூர் போலீசாரின் செயலற்ற தன்மை, ஆள்பலம், வேட்பாளரின் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்காளருக்கு பணம் கொடுப்பது தொகுதிக்கு தொகுதி வேறுபடுகிறது. இருந்தபோதிலும், தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தேர்தல் அலுவலகம் எடுத்த உறுதியான நடவடிக்கையால் பணம் கடத்தப்படுவதும், பண விநியோகமும் தடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தமிழ்நாட்டில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனால்தான் பண பட்டுவாடாவை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல், அதை ஒரு சவாலாக எடுத்து அதைத் தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தேர்தலில் வேட்பாளரின் செலவை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் ஏராளமான துணை ராணுவத்தினரும், வருமானவரித்துறை அதிகாரிகளும் பணி அமர்த்தப்பட்டனர். இதன்காரணமாக கணக்கில் காட்டப்படாத ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாத வாக்காளர்கள், வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் 49ஓ என்று எழுதி கையெழுத்திட வேண்டும். இதுபற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடிகளின் வெளிப்பகுதியில் அதுகுறித்த நடைமுறை விவரங்கள் அடங்கிய சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது.

49ஓ பற்றி வாக்காளர்களுக்கு அதிக விழிப்புணர்வு இருந்தது. ஆனால், பெரும்பாலான வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு 49ஓ பற்றிய நடைமுறைகள் தெரியவில்லை.

கடந்த தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டுப்போட்டதாகவும், இந்த தேர்தலில் வாக்களிக்க சென்றபோது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை என்றும் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் கூறி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், ஜனவரி மாதங்களில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் போன்றவற்றை செய்வதற்காக அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன்பிறகு அந்த மாற்றங்கள் செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதை தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் ஆண்டு திருத்தம் செய்யும் பணியை செப்டம்பர் அல்லது ஆகஸ்டு மாதம் மத்தியில் தொடங்கிவிட வேண்டும். அவ்வாறு செய்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தல், கம்ப்யூட்டரில் வாக்காளர் விவரங்களை பதிவு செய்தல், வீடு, வீடாகச் சென்று விவரங்களை சரிபார்த்தல், திருத்தத்திற்கான உத்தரவு பிறப்பித்தல், வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடம்பெறுவதை தவிர்த்தல், வாக்காளர் பட்டியலை அச்சிடுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் முடித்து வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு 4 அல்லது 41/2 மாதங்கள் காலஅவகாசம் கிடைக்கும். இரண்டாவதாக, ஆன்-லைனில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியையும் முன்கூட்டியே முடித்துவிட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணியில் குடியிருப்போர் நல சங்கத்தினர், சமூக சேவை அமைப்பினரையும் ஈடுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். வீடு, வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும்போது, மேற்கண்ட அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி, வாக்காளரை அடையாளம் காணவும், விண்ணப்பத்தை வழங்கிடவும், வயது, முகவரி தொடர்பான ஆவணங்களையும், புகைப்படத்தையும் வாங்குவதற்கும் உதவியாக இருப்பார்கள். இத்தகைய தனியார்-அரசு கூட்டு முயற்சி திட்டத்தை, பெங்களூர் நகரில் உள்ள ஒரு தொகுதியில் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள்’’ என்று கூறினார்.


No comments: