Wednesday, June 29, 2011

திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றது - தமிழக அரசு.



ஒரே மாதிரியான புத்தகம் வழங்குவது மட்டும் சமச்சீர் கல்வி அல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு தேவையான தரமான பாடங்களை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி. ஆனால் முந்தைய அரசு தரமற்ற சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதால்தான் அதில் தமிழக அரசு திருத்தம் செய்தது என்று தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி மனோன்மணி உள்ளிட்ட சிலர் சமச்சீர் கல்விக்கு தடை விதிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

அதில் தமிழக அரசு கூறியுள்ளதாவது:

சமச்சீர் கல்விச் சட்டம்-2010 என்ற சட்டத்தை இயற்றிய போது கடந்த ஆட்சியாளர்கள், மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை கருத்தில் கொள்ளவில்லை. கல்விச் சட்டங்களை இயற்றுவதற்கு அதுதான் மூலச்சட்டமாக உள்ளது.

தேசிய பாடத் திட்டங்கள் வடிவமைப்பு-2005-ல் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணையாக சமச்சீர் பாடத்திட்டங்கள் தரமானதாக அமையவில்லை.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அன்று ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கல்விக் குழு தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில் சில குறைகளை கல்விக் குழு சுட்டிக்காட்டியது. அந்த குறைகளை முந்தைய அரசு நிவர்த்தி செய்யவில்லை. சமச்சீர் கல்வி பற்றி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், புத்தகங்களை தேர்வு செய்யும் உரிமை பள்ளிக்கூடங்களுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டத்திலேயும் இந்த ஷரத்து இடம்பெற்றுள்ளது. ஆனால் இதை நடைமுறையில் முந்தைய அரசு கடைபிடிக்கவில்லை. எனவே அது அந்த சட்டத்தை மீறுவதுபோல் அமைந்துவிட்டது.

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களின் அட்டவணையை 15.5.10-க்குள் அங்கீகரிக்க வேண்டும் என்று சமச்சீர் கல்வி வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதன்படி நடந்துகொள்ளவில்லை. கட்டாய கல்விச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகளை வகுக்காமல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 14-ந் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. அதை இரவு-பகலாக பாடுபட்டு நிறைவேற்றி வருகிறோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜுலை 5-ந் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், மனுதாரரின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகிவிடும். மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கதாக இருக்காது.

ஒரே மாதிரியான புத்தகம் வழங்குவது மட்டும் சமச்சீர் கல்வி அல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு தேவையான தரமான பாடங்களை வழங்குவதுதான் சமச்சீர் கல்வி.

ஆனால் சமூகநீதி என்ற பெயரில் தரமற்ற பாடத்திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க மனுதாரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டத்தை இந்த அரசு கைவிடவில்லை. அந்த கல்வியை நாங்கள் நீக்காமல், சமச்சீர் சட்டத்தின் 3-ம் பிரிவை மட்டும்தான் (சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு வகை செய்யும் பிரிவு) திருத்தம் செய்தோம்.

முத்துக்குமரன் கமிட்டி, விஜயகுமார் ஆகியோரின் பரிந்துரைப்படி, சமச்சீர் கல்விக்கான மாநில கவுன்சில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்தக் கவுன்சில்தான் கல்வி தரத்துக்கான வழிமுறைகளை தொடர்ந்து வகுத்தளிக்கும். ஆனால் இந்த குழுவை முந்தைய அரசு ஏற்படுத்தவில்லை.

சமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசு அவசரமாக முடிவு செய்யவில்லை. தீர விசாரித்து, நிதானமாக யோசித்துதான் நடவடிக்கைகளை எடுத்தோம். எனவே இந்த நடவடிக்கைகளால் எந்த பிரிவினருக்கும் அரசியல் சாசனம் தரும் உரிமைகள் பாதிக்கப்படாது.

மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தால், தமிழகத்தில் உள்ள 54,957 பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 35 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

சமச்சீர் கல்வி புத்தகங்களுக்காக செலவிடப்பட்ட ரூ.200 கோடி வீணாய்ப் போகும் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டு மிகையானது. சட்டங்களை அமல்படுத்தவும் அவற்றில் குறையிருந்தால் அதை திருத்தி அமல்படுத்தவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

தற்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு எப்படிப்பட்ட பாடத்திட்டத்தை வகுத்தளிக்கிறதோ, அதனடிப்படையிலான புத்தகங்களை மாணவர்களுக்கு இந்த அரசு வழங்கும் என்று உறுதி அளிக்கிறோம். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments: