Tuesday, June 28, 2011

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது : ஜெயலலிதா பேட்டி.



முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு :-

கேள்வி:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும். இந்த நிலையில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.

அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும். அரசாங்கத்துக்கு நிகராக, நிழல் அரசாங்கம் உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.

இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது. இருப்பினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கடந்த ஆண்டு அறிவித்தீர்களே?

பதில்:- காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக நான் கூறியது 2010ம் ஆண்டு இருந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான். அது ஒருமுறை கூறப்பட்ட வாய்ப்புதான். இப்போது அது இல்லை. 2010க்குப் பிறகு நிலைமை வெகுவாக மாறி விட்டது. அது அப்போது தரப்பட்ட ஒரு உறுதிமொழி, அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவ்வளவுதான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கேள்வி:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பீர்களா?

பதில்:- சோனியாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும்போது, அப்படி செய்வது முறையல்ல.

கேள்வி:- காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? ராகுல் காந்தி, பிரதமர் ஆக வாய்ப்புள்ளதா?

பதில்:- அந்த சூழ்நிலை வரும்போது, அதுபற்றி சொல்கிறேன். மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.

கேள்வி:- 3வது அணி ஏற்படுமா?

பதில்:- எதிர்கால அரசியல் சூழ்நிலை குறித்து இப்போதே கூற முடியாது. அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி:- பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?

பதில்:- எனக்கு அனைத்துக் கட்சிகளிலும் நல்ல நண்பர்கள் உள்ளனர்.

கேள்வி:- மத்தியில் மீண்டும் தனிக்கட்சி ஆட்சி வரும் என கருதுகிறீர்களா?

பதில்:- அதற்கான வாய்ப்பே இல்லை. ஒரு கட்சி ஆட்சி முறை முடிந்து போய் விட்டது. எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறும் என நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் கூட்டணி ஆட்சிகள்தான் வரும்.

கேள்வி:- தயாநிதி மாறன் நீக்கப்பட வேண்டுமா?

பதில்:- அதை பிரதமர்தான் சொல்ல வேண்டும். ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டியது, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பிரதமரின் கடமையும், பொறுப்புமாகும். அதை அவர் செய்ய வேண்டும்.

கேள்வி:- ப.சிதம்பரம்?

பதில்:- ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வெல்லவே இல்லை. அவர் மோசடியான முறையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது நாட்டுக்கே தெரியும். நாட்டை அவர் மோசடி செய்து விட்டு பதவியில் அமர்ந்துள்ளார். அவர் பதவியில் நீடிப்பது சரியல்ல, பொருத்தமானதல்ல, நியாயமானதல்ல என்றார் ஜெயலலிதா.

கேள்வி:- தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:- அத்தகைய விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அது வரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.

கேள்வி:- உங்கள் லட்சியம் என்ன?

பதில்:- இந்தியா, சூப்பர் பவர் ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற் கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசபக்தி கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

No comments: