Tuesday, June 28, 2011

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு : 1,809 மாணவர்களுக்கு அழைப்பு.



தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 30-ம் தேதி முதல் நடைபெறும் முதல் கட்ட கலந்தாய்வுக்கு மொத்தம் 1,809 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்-விளையாட்டு வீரர்கள் - ராணுவ வீரர்களின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான 55 எம்.பி.பி.எஸ். இடங்கள் - 1 பி.டி.எஸ். இடம்,

சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 767 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு வரும் 30-ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொடர்ந்து பொதுப் பிரிவினர் உள்ளிட்ட பிற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 3-ம் தேதி ஞாயிறு கலந்தாய்வு கிடையாது.




கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்... எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து ஏற்கப்பட்ட 20,123 மாணவர்களுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. ரேங்க் பட்டியலில் 66 மாணவர்கள் 200-க்கு 200 பெற்று முன்னணியில் உள்னர். இவர்களில் பிறந்த தேதி அடிப்படையில் கம்ப்யூட்டர் ரேண்டம் எண் மூலம் முதல் 10 பேருக்கு சிறப்பிடமும் ஏற்கெனவே அளிக்கப்பட்டு ள்ளது.

அனைத்துப் பிரிவினர் உள்பட வகுப்பு வாரியாக ரேங்க் பட்டியல் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தயாரித்து சுகாதாரத் துறையின் இணையதளம்

அரசின் இணையதளம் www.tnhealth.orgல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

50 மாற்றுத் திறனாளிகளுக்கு... தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் (3 சதவீதம்) மாற்றுத் திறனாளி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். கலந்தாய்வு தொடக்க தினமான ஜூன் 30-ம் தேதியன்று மொத்தம் 66 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்

குழு அலுவலகத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து ஊனத்தின் பாதிப்பை உறுதி செய்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

15 மாணவர்களுக்கு... ராணுவ வீரர்கள் குழந்தைகள் பிரிவில் 2 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடமும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் விண்ணப்பித்தவர்களில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 433 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, 200-க்கு 197.25 வரை வரிசையாக முதலில் உள்ள 15 மாணவர்கள் மட்டும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பிரிவில் கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரவும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ். படிப்பில் சேரவும் அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

விளையாட்டில் சிறந்து விளங்குவோர்: விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். இந்த 3 இடங்களுக்கான மாணவர்களை செவ்வாய் (ஜூன் 28), புதன் (ஜூன் 29) ஆகிய இரண்டு தினங்கள் அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் குழு சான்றிதழ் களைச் சரிபார்த்து தேர்வு செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் 3 மாணவர்களுக்கு ஜூன் 30-ம் தேதியன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.

ஜூலை 1 முதல் 6-ம் தேதி வரை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் அனைத்துப் பிரிவினருக்கு வரும் ஜூலை 1, 2 ஆகிய இரண்டு தினங்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. அனைத்துப் பிரிவினரில் ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி, 200-க்கு 198.75 வரை பெற்றுள்ள 550 மாணவர்கள் கலந்தாய்வுக்கு (ஜூலை 1, 2) அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் என வகுப்பு வாரியாக ஜூலை 6-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 197.75 வரை மொத்தம் 432 மாணவர்கள் கலந்தாய்வுக்கு (ஜூலை 2, 4) அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 196.25 வரை மொத்தம் 65 மாணவர்கள் (ஜூலை 4 பிற்பகல் 2 மணி) அழைக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 196.25 வரை மொத்தம் 339 மாணவர்கள் (ஜூலை 5) அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 6-ல்.... தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினருக்கு ஜூலை 6-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75-ல் தொடங்கி 191.75 வரை உள்ள 261 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ல் தொடங்கி 188.00 வரை உள்ள 55 மாணவர்களும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரிவில் கட்-ஆஃப் மதிப்பெண் 197.25 முதல் 185.25 வரை இடம்பெற்றுள்ள 23 மாணவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

No comments: