Monday, June 27, 2011

சட்ட மசோதா தயாரிப்பில் இனிமேல் சமூக ஆர்வலர்களுக்கு இடம் கிடையாது ; மத்திய மந்திரி கபில்சிபல் பேட்டி.

சட்ட மசோதா தயாரிப்பில் இனிமேல் சமூக ஆர்வலர்களுக்கு இடம் கிடையாது; மத்திய மந்திரி கபில்சிபல் பேட்டி

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தயாரிக்கும் பணியில், அன்னா ஹசாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்களுடன் மத்திய மந்திரிகள் ஈடுபட்டனர். அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், லோக்பால் மசோதா தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- மத்திய அரசின் மசோதா தயாரிப்பு பணியில் சமூக ஆர்வலர்களை இனி மேல் சேர்க்க மாட்டோம்.

அதனால் இப்போது ஏற்பட்ட அனுபவம், இனி வருங்காலத்தில் ஏற்படாது. மசோதா தயாரிப்பு குழுவில் சேர்க்காவிட்டால், சில சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும். அதையும் நான் ïகிக்கவே செய்துள்ளேன். மத்திய மந்திரிகள் தயாரித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவை இறுதியானதாக கருத முடியாது.

அனைத்துக் கட்சிகளுடனும், வேறு சில சமூக ஆர்வலர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, மசோதாவில் சில திருத்தங்களை செய்யப் போகிறோம். மசோதாவை நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்டு 16-ந் தேதி முதல், உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

அந்த சூழ்நிலை வரும் போது, அதை மத்திய அரசு சமாளிக்கும். உண்ணாவிரதம், சரியான வழிமுறை அல்ல என்று சமூக ஆர்வலர் தரப்பைச் சேர்ந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். எனவே, தனக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்று முடிவு எடுக்கும் ஞானம், அன்னா ஹசாரேவுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை கொண்டு வருவதா? இல்லையா? என்பதுதான், எங்கள் பேச்சுவார்த்தையின் மையப்பிரச்சினை என்று கருதுவது சரியல்ல.

அரசுக்கு நிகரான அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அந்த அமைப்பு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்றும் அன்னா ஹசாரேவும், அவருடைய ஆதரவாளர்களும் கூறினர். அது தான் கருத்து வேறுபாட்டுக்கு வழிவகுத்தது.

சி.பி.ஐ., ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு நிகரான அமைப்பை அவர்கள் விரும்பினார்கள். இத்தகைய அமைப்பில் இருப்பவர்கள், ஊழலுக்கு இடம் கொடுக்காமல், தூய்மையாக நடந்து கொள்வார்கள் என்று எப்படி உறுதிப்படுத்த முடியும்? எனவேதான், கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பாபா ராம்தேவ், எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வாக்குறுதி அளித்துக் கொண்டே, ராம்லீலா மைதானத்தில், அதற்கு நேர்மாறான காரியத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அதனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை மத்திய அரசு அம்பலப்படுத்தியது. விமான நிலையத்தில், அவரை வரவேற்றதால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாக கூற முடியாது. அவரை சந்தித்ததால்தான், அவரை அம்பலப்படுத்த முடிந்தது.

புதிதாக அமைக்கப்படும் தேசிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கமிஷனில் மருத்துவ கல்வியையும் சேர்ப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இது தொடர்பான வரைவு மசோதா, மத்திய மந்திரி சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர், அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

No comments: