Saturday, December 24, 2011

மெரினாவில் நாளை மக்கள் திரள் போராட்டம்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கக் கோரி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் மக்கள் திரள் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தியும், தேனி மாவட்ட மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சென்னை மெரினா கடற்கரையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மக்கள் திரள் போராட்டம் நடைபெறுகிறது.

'மே பதினேழு' இயக்கம் சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன், கவுதமன், சேரன், முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி வேல்முருகன், திருமுருகன், ஓவியர் வீர சந்தானம் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்றும், புதிய அணை கட்ட மாட்டோம் என்றும் 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவோம் என்றும் கேரளம் முடிவெடுக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் புதிய புதிய வடிவங்களைப் பெறும்.

அதனால்தான் நாளை 25-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் மாலை 3 மணி அளவில் தமிழக உரிமை காக்கும் உணர்வாளர்கள் மக்கள் திரளாக பங்கேற்க மே 17 இயக்கத்தினரும், கலை உலக விற்பன்னர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகமெல்லாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் திரள்கிறோம் "நிதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்றார் ஏசு பெருமான்.

முல்லைப் பெரியாறில் தமிழ் நாட்டுக்கு நீதி நிலைக்க வேண்டும் என்ற பசிதாகத்தோடு பங்கேற்போம். ஆராயாது, தவறான தீர்ப்பளித்த வேந்தனை எதிர்த்து எரிமலையாய் சீறினாள் கண்ணகி இன்றோ, உண்மையைத் தெரிந்து கொண்டே அதற்கு மாறாக அநீதி செய்யும் மத்திய அரசை எதிர்க்கவே தமிழகத்தின் சீற்றத்தைக் காட்ட கடற்கரையில் திரண்டிடுவோம். கட்சி அடையாளங்களையும், கட்சிக் கொடிகளையும் தவிர்க்க வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

No comments: