முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தொழில் நுட்ப குழு இன்று காலை இறுதிகட்ட ஆய்வைத் தொடங்கியது.
இந்தத் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் குமுளி அருகேயுள்ள தேக்கடியில் இருந்து காலை 9.45 மணிக்கு படகின் மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குப் புறப்பட்டது.
அப்போது, தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர்.
இந்த ஆய்வின்போது, ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளை சந்திக்கக் கூடாது என்று ஆய்வுக்குழுவுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிகட்ட ஆய்வு...
முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இடுக்கி மாவட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக பிரசாரம் செய்வதோடு, பல இடங்களில் சேத தடுப்பு மற்றும் கண்காணிப்பு மையங்களையும் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டது.
இதற்காக உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்வு செய்தனர். அப்போது 2 கட்டமாக ஆய்வு நடந்தது. அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண்படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் இறுதிக்கட்ட ஆய்வில் ஈடுப்பட்டுளனர்.
கொச்சிக்கு விமானம் மூலம் நேற்று வந்தக் குழுவினர் இருவரும் கார் மூலம் இடுக்கி அணைக்கு சென்றனர். அங்கு, இடுக்கி அணையை பார்வையிட்டுவிட்டு, அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து குழுவினர் தேக்கடிக்கு சென்று இரவு தங்கினார்கள். இன்று முல்லைப் பெரியாறு அணைக்குப் புறப்பட்டனர். அணை பகுதி மற்றும் மதகு, பேபி அணை, அதன் அருகில் உள்ள எர்த் டேம் என்ற பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
அணையின் உறுதித்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது.
அணையின் இறுதிக்கட்ட ஆய்வாக அணைக்கு அடியில் உள்ள மண்ணை எடுத்து பரிசோதனை செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 2 ராட்சத டிரில்லிங் எந்திரங்கள் அணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் ஒரு எந்திரம் துளையிடுவதற்காகவும், மற்றொரு எந்திரம் துளையிட்ட இடத்தை மீண்டும் அடைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
அந்த எந்திரங்களை வைத்து அணையில் 7 இடங்களில் 30 அடி ஆழத்துக்கு துளையிட்டு கீழே இருக்கும் மண்ணை எடுத்து பரிசோதிக்கப்பட இருக்கிறது.
அதன்மூலம் அணையின் உறுதித்தன்மை எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறியமுடியும். பரிசோதனைக்காக துளையிட்டு மண் எடுக்கும் பணி, தொழில்நுட்ப குழுவினர் முன்னிலையில் நடக்கிறது.
ஒரேநாளில் மண் எடுக்கும் பணி முடியவில்லை என்றால் மறுநாளும் அதை தொடருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை தொழில்நுட்ப குழுவினர் முழுமையாக பார்வையிட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த மண் பரிசோதனைக்கு பிறகு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுவிடும் என்பதால், இதுவே இறுதிக்கட்ட ஆய்வாக கருதப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்ப குழுவினர் ஞாயிற்றுக்கிழமை வைகை அணைக்கு சென்று பார்வையிடுகின்றனர். அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பேரணை மற்றும் வாய்க்கால்களை பார்வையிடுகிறார்கள்.
No comments:
Post a Comment